ராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். தற்போது ராமநாதபுரத்தில் இயங்கி வரும் பேருந்து நிலையம் நகரின் மைய பகுதியில், மிகவும் நெருக்கடியான இடத்தில் உள்ளதால் அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் பேருந்து நிலையம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு யாத்ரீகர்களும்,  உள்ளூர் வெளியூர் பயணிகளும் பயன்பெறும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும் அங்கு ஏற்படுத்திட வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட சுற்று வட்டார பொதுமக்கள் கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், போக்குவரத்து துறை அமைச்சரின் இந்த அறிவிப்பானது மாவட்ட மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பருவ மழை எச்சரிக்கை தொடர்பாக மாவட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மழை வெள்ளம் ஏற்பட்டால் தாழ்வான இடங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் மற்றும் கரையோரங்களில் வசிக்கக்கூடிய மீனவர்கள் ஆகியோரை பாதுகாப்பான இடங்களுக்கு தங்க வைக்க ஏற்பாடு செய்திட வேண்டும். தற்காலிக முகாம்கள் அமைத்து அங்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.




அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு பருவமழை முன்னேற்ற நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மாவட்டத்தில் எளிதாக மழை நீர் தேங்கக்கூடிய  தாழ்வான பகுதி களான 42 இடங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் கன மழை மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்காக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தில் தற்போது மழை வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. ஆனாலும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் பணிகளுக்கான போதுமான உரம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. எனவே இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்று மாவட்டத்திற்கு 1300 டன் அளவில் உரம் வர உள்ளது. இந்த உரங்களை அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.


மேலும், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி வருகின்ற நிதியாண்டில் புதிய பஸ் நிலையம் அமைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகளும் விரைவில் மேற்கொள்ளப்படும். அது மட்டுமில்லாமல் தமிழக போக்குவரத்து துறைக்கு புதிதாக 2500 பேருந்துகள் வாங்க முடிவு செய்துள்ளது.அதில் 500 பேருந்துகள் மின்சார பேருந்துகளாகும். மேலும் பழுதான பேருந்துகளை சீரமைப்பதற்காக நிதி உதவி கேட்கப்பட்டுள்ளது. எனவே இரண்டு மூன்று மாதங்களில் பேருந்துகளை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.