திமுக இந்து மதத்திற்கு எதிரான கட்சி என்று எதிர்க்கட்சியினரால் பரப்புரை செய்யப்பட்டு வரும் நிலையில், மும்மத பிரார்த்தனையுடன் கீழக்கரையில் அரசு நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டிய ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் செயல் அனைத்து தரப்பினரிடையே பாராட்டு பெற்றுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா ஆலாபுரம் ஏரி சீரமைப்பு பணி தொடங்கியது. இதற்காக துறை சார்ந்த நீர்வள ஆதார அலுவலர்கள் பணியை துவங்க பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது விழாவில் கலந்து கொண்ட தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் எம்பி செந்தில்குமார் பூஜை செய்ய எதிர்ப்பு தெரிவித்ததுடன் பூஜைக்கான ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகளை கடுமையாக திட்டினார். மேலும் 'இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடமில்லை. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா, தெரியாதா? இது இந்து மத நிகழ்ச்சியா? மற்ற மதத்தினா் எங்கே? கிறிஸ்டியன் ஃபாதர் எங்கே? இஸ்லாம் மதத்தின் இமாம் எங்கே? திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள் எங்கே? முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போன்று நடைபெறுவதில்லை. இது திராவிட மாடல் ஆட்சி.' என அவர் பேசியது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் இந்துமத பற்றாளர்கள் இடையே எதிர்ப்பை கிளப்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மும்மத பிரார்த்தனையுடன் அடிக்கல் நாட்டியுள்ளார் ராமநாதபுரம் திமுக எம்.எல்.ஏ.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு தாலுகா மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் மும்மத போதகர்கள் வரவழைக்கப்பட்டு அனைத்து பிரார்த்தனையுன் அடிக்கல் நாட்டப்பட்டது. இது கட்சி, மதம் தாண்டி அனைத்து தரப்பு பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு கீழக்கரை நகர செயலாளர் பஷீர் அகமது கீழக்கரை நகர் மன்ற தலைவர் செகானாஸ் ஆபிதா நகர்மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனை மருத்துவர் ஜவாஹிர் உசேன் வரவேற்புரை ஆற்றினார்.
மேலும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பேசுகையில், தரம் உயர்த்தப்பட்ட தாலுகா அரசு மருத்துவமனை ஒன்பது கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கீழக்கரை உரக்கடங்கில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் விரைவில் அனைத்து பணிகளும் நிறைவடையும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் அயலக அணி அமைப்பாளர் இப்திஹார் ஹசன் ஒன்றிய பெருந்தலைவர் கே டி பிரபாகரன் கீழக்கரை நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.