மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 'மாவட்டத்தில் சர்க்கரை, இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயாளிகள் 21 ஆயிரம் பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாத்திரைகள் வீடுகளுக்கு சென்று நேரில் வழங்கப்பட்டு வருகிறது' என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று வீடுகளை தேடி மருத்துவ உதவிகளை வழங்கும் 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஒரு கோடி பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் கிராமப்புற மருத்துவ சேவைகளுக்காக மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்த காலத்தில் இந்த மினி கிளினிக்குகளில் பணிபுரிந்தவர்கள் பிற அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போதைய திமுக ஆட்சி, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் கொரோனா காலத்தில் மருந்து மாத்திரைகளை வாங்க மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் சிரமங்களைப் போக்குவதற்கு தமிழகத்தில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து சுமார் ஒரு கோடி பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு அவர்களது வீடுகளுக்கே சென்று மாத்திரைகள் வழங்கப்படும். இந்தப் பணியை சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொள்வார்கள். அனைத்து வகை நோயாளிகளையும் கண்டறியும் பணியை முறையாகச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்திருந்தார்.
இந்த திட்டம் தொடங்கப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 21,000 நோயாளிகள் பயன் அடைந்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். திட்டத்தை தொடங்கி வைத்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கூட இந்த அளவுக்கு பயன் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தின் கடைக் கோடியில் அமைந்துள்ள தென் மாவட்டங்களில் ஒன்றான ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டம் மிகப் பெரிய அளவில் மக்களை சென்றடைந்து நோயாளிகள் பயனடைந்துள்ள விஷயம் அரசுக்கு பெரும் பாராட்டை பெற்றுத்தந்துள்ளது எனக்கூறலாம்.