இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான மா. சிவகுரு பிரபாகரன் இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.

Continues below advertisement

இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 1,514 வாக்குச்சாவடிகளில் 11,33,535 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 5,61,335 ஆண் வாக்காளர்களும், 5,72,143 பெண் வாக்காளர்களும், 57 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி,

Continues below advertisement

* பரமக்குடி (தனி) சட்டமன்றத் தொகுதியில் 2,35,002 வாக்காளர்கள்.

* திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 2,85,088 வாக்காளர்கள்.

* ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் 3,13,507 வாக்காளர்கள்.

* முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 2,99,938 வாக்காளர்கள்.

என மொத்தம் 11,33,535 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

7,309 புதிய வாக்காளர்கள் சேர்ப்பு – 3,507 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 06.04.2026 அன்று வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,59,525 ஆண் வாக்காளர்கள், 5,70,152 பெண் வாக்காளர்கள், 56 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 11,29,733 வாக்காளர்கள் இருந்தனர்.

அதன்பிறகு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் 3,477 ஆண் வாக்காளர்கள், 3,830 பெண் வாக்காளர்கள், 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 7,309 புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், இறப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1,667 ஆண் வாக்காளர்கள், 1,839 பெண் வாக்காளர்கள், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,507 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கடந்த வாக்காளர் பட்டியலை ஒப்பிடுகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 3,802 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதை பொதுமக்கள் கட்டாயம் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO), வருவாய்த்துறை அலுவலகங்கள் மற்றும் உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட நியமிக்கப்பட்ட இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.elections.tn.gov.in வாயிலாகவும் தங்களது பெயர் மற்றும் வாக்காளர் விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.