01.01.2027-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் 5.77 கோடி வாக்காளர்கள்
12.11.2026 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் வாக்குச் சாவடிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டதோடு, (https://www.elections.tn.gov.in) என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. புகைப்படத்துடன் கூடிய ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம், 2027-இன் படி தமிழ்நாட்டில் தற்போதைய மொத்தம் 5,77,46,618 வாக்காளர்கள் உள்ளனர். அவை முறையே ஆண்கள்- 2,82,03,992 பேரும் பெண்கள்- 2,95,34,734 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் - 7,892 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திலேயே 5,58,729 பேருடன் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக செங்கல்பட்டு மாவட்டத்தின் சோழிங்கநல்லூரும், மாநிலத்திலேயே 1,20,852 பேருடன் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதி உள்ளது.
திருத்தம் மேற்கொள்ள தேதிகள் அறிவிப்பு
வருகிற 21,22 மற்றும் 29-ஆம் தேதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றிற்கான படிவங்கள் அந்தந்த நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் கிடைக்கும் எனவும் அவற்றை பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. (https://voters.eci.gov.in) ஆகிய இணையதள முகவரி மற்றும் "ECINET" கைபேசி செயலி ஆகியவற்றின் மூலமாகவும் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
