பாமகவின் அலுவலகம் சென்னையில் இருந்து தைலாபுரத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, “பாமகவின் பெயர், கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. அன்புமணி தனது பெயருக்கு பின்னால் என் பெயரை இன்சியலாக போட்டுக்கொள்ளலாம். ஆனால் என் பெயரை போடக்கூடாது.
நான் அமர்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக்கேட்பு கருவி வைத்துள்ளனர். அது இங்கிலாந்தில் வாங்கப்பட்டிருக்கலாம். என் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி யார் வைத்தது என்பது எனக்கு தெரியும். அன்புமணி தலைமையில் அணி என்பதே கிடையாது. நான் தான் கட்சி. நான் தான் தலைவர்.
புதிய நிர்வாகிகள் பட்டியல் தொடர்பான விவரங்கள் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணத்தால் வட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை கோரி டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. நடைபயணத்தின்போது பாமகவின் கொடியை பயன்படுத்தக்கூடாது.
பனையூரிலோ அல்லது சென்னையில் வேறு எங்குமோ பாமக அலுவலகம் இருக்கிறது என்பது சட்டவிரோதம். சென்னையில் பாமக அலுவலகம் இல்லை. தைலாபுரத்தில் தான் பாமக அலுவலகம் மாற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.