தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 10-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 24-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கால் பொதுமக்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசின் சார்பில் அவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இதன்படி, முதற்கட்டமாக ரூபாய் 2 ஆயிரம் தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், இன்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகளும், அமைப்புசாரா தொழிலாளர்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அவர்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்பாடதது ஏமாற்றம் அளிக்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பே முடிதிருத்தகங்கள் மூடப்பட்டன. அப்போது முதல் பல வகையான அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்துவிட்டனர்.


மாற்றுத்திறனாளிகள், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய உதவிகள் குறித்து தமிழக அரசின் சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. தமிழக அரசு சார்பில் அனைவருக்கும் வழங்கப்படும் நிதியுதவியையும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு நிதியுதவியையும் ஒப்பிட முடியாது.




அரசால் வழங்கப்பட்டுள்ள ரூபாய் 2 ஆயிரம் மூலம் ஒரு குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று. முடிதிருத்தும் தொழிலாளர்கள், கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பட்டாசு தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரங்களை முற்றிலுமாக இழந்துவிட்டனர். தமிழக அரசு வழங்கிய ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானதாக இல்லை. அமைப்புசாரா தொழிலாளர்களின் நிலையை காட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் நிலை மோசம். அவர்களின் மருத்துவ செலவுகளும், வாழ்வாதாரத் தேவைகளும் மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதிகம். குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் நிதியுதவி மாற்றுத்திறனாளிகள் பெரும்பாலோனாருக்கு கிடைக்காது.




முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து வகையான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் இரு தவணைகளில் தலா ரூபாய் 1000 என மொத்தம் ரூபாய் 2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கும் தலா ரூபாய் ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை.


மேலும் படிக்க : https://tamil.abplive.com/news/india/tamil-nadu-corona-virus-latest-news-live-updates-covid-19-lockdown-chennai-coimbatore-district-grocery-shops-4571/amp/ampTamil Nadu Coronavirus LIVE News : தமிழகத்தில் 5 லட்சம் தடுப்பூசிகளே கையிருப்பில் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை, வாழ்வாதார இழப்பு, கொரோனா காலத்தில் அவர்களின் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வாரம் ரூபாய் ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.