PMK Ramadoss; தமிழ்நாடு அரசு பணிக்கு தமிழ்நாடு அரசு, மத்திய அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ள சான்றிதழ் செல்லாது என்பது நியாயமா என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது. இதில் நில அளவர் மற்றும் வரைவாளர் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளார் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவித்திருந்தது. இதற்கான கல்வித்தகுதியாக
சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ/ பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் அல்லது சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் வழங்கும் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் தனது சமூகவலைதளப் பக்கமான டிவிட்டரில், டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு 1089 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையில் தேசிய தொழிற்கல்வி மையம் (NCVT) வழங்கிய ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.டி.ஐ. படிப்புகளுக்கு NCVT போன்று தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையமும் (TNSCVT) சான்றிதழ் வழங்குகிறது. இரு சான்றிதழ்களும் அடிப்படையில் ஒன்று தான். ஆனால், TNSCVT வழங்கும் ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கூறுவது அநீதியானது. TNSCVT சான்றிதழை மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம் உள்ளிட்ட பல தேசிய, சர்வதேச அமைப்புகள் அங்கீகரித்துள்ளன. தமிழக அரசு ஐடிஐகளிலும் இந்த சான்றிதழ் வழங்கப்படுகிறது. அத்தகைய சான்றிதழை தமிழக அரசு பணிக்கே ஏற்க மறுப்பது எந்த வகையில் நியாயம்?கள அளவையர் உள்ளிட்ட பணிகளுக்கு TNSCVT வழங்கும் ஐடிஐ சான்றிதழ் பெற்றவர்களையும் டி.என்.பி.எஸ்.சி அனுமதிக்க வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க அவகாசம் முடிந்து விட்ட நிலையில், திருத்தப்பட்ட ஆள் தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.