மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி பேராறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  கடந்த மே மாதம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது. அதைதொடர்ந்து, தங்களையும் விடுவிக்கக் கோரி நளினி உள்ளிட்டோர் தனித்தனியே தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பேரறிவாளனுக்கு விதித்த தீர்ப்பே ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என உத்தரவிட்டது.


 


இதையடுத்து 32 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர், கடந்த 12ம் தேதி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அவர்களில், ஜெயக்குமார்,ராபர்ட் பயஸ், முருகன் மற்றும் சாந்தன் ஆகிய நான்கு பேரும்,  இலங்கை குடிமக்கள் என்பதால் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


 


அவர்களை முருகனின் மனைவி நளினி மற்றும் ஜெயக்குமாரின் மனைவி சாந்தி ஆகியோர் கடந்த15ம் தேதி நேரில் சந்தித்து பேசினர். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நளினி,  மத்திய அரசும், மாநில அரசும் நான்கு பேரையும் விரைவாக முகாமிலிருந்து வெளியே அனுப்ப வேண்டும். சாந்தன் இலங்கைக்கு செல்கிறேன் என்கிறார். நானும் என் கணவர் முருகனும் லண்டன் செல்ல விரும்புகிறோம். ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகிய இருவரும் அது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என, நளினி பேசினார்.


இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக திருச்சி சிறப்பு முகாமில் இருந்த ஜெயக்குமார், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.