RajivGandhi Case : உச்சநீதிமன்ற தீர்ப்பு : சிறையில் இருந்து நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலை
உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நளினி உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தது தொடர்பாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய 7 பேர் கடந்த 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். 28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்ட நளினி மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் தனித்தனியே மனுத்தாக்கல் செய்தனர்.
Just In




இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பே, ஏனைய 6 பேருக்கும் பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கியது.

ஏற்கனவே, அரசியல் சட்டத்தின் 161வது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அந்த விவகாரத்தில் முடிவெடுக்க மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளதாக கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி காலம் தாழ்த்தி வந்தார். இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி 6 பேரையும் விடுதலை செய்தது.
இந்நிலையில், கடந்த 10 மாதங்களாக பரோலில் உள்ள நளினி, வழக்கம்போல் கையெழுத்திடுவதற்காக காட்பாடி காவல்நிலையத்திற்கு சென்றார். இதனிடையே, அவரை விடுவிப்பதற்கான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பான ஆவணங்கள், வேலூர் பெண்கள் மத்திய சிறையை வந்தடைந்தன. அதைதொடர்ந்து, அங்கு சென்ற நளினி உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் நிறைவு செய்த பிறகு, முறைப்படி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனிடையே, புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த, ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர்.
6 பேர் விடுதலைக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்குது.