ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரகத் தலைவருக்கு இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், சிறையில் வாடும் நளினி, ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் 30 ஆண்டுகளாக சிறையில் வாடும் ஏழுபரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதில்மனுத் தாக்கல் செய்த தமிழக அரசு," எழுவர் விடுதலையில் முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய குடியரசுத் தலைவருக்குத் தான் இருக்கிறது என்ற ஆளுநரின் முடிவை மத்திய அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எழுவர் விடுதலை தொடர்பான எந்தவொரு அரசாணையும் வெளியிடப்படவில்லை. எனவே,விடுதலை செய்யக் கோரும் நளினியின் மனு சட்டப்படி செல்லாது" என்று தெரிவித்தது. இதுகுறித்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினிக்கு பரோல் வழங்க வேண்டும் எனவும் உடல்நிலை சரியில்லாத தன்னை பார்த்துக்கொள்ள நளினிக்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும் நளியின் தாயார் பத்மா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்மன்றத்தில் தமிழக அரசு “நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்