தமிழ் திரை இசையை உலக அளவில் கொண்டு சென்று, தமிழ்நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் இசைஞானி என்று அழைக்கப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. திரை இசை உலகில் 50 ஆண்டுகளை அவர் நிறைவு செய்ததை ஒட்டி, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு இன்று பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில், அவரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் என் பேசினார் என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.
“தமிழர்களின் நாடி, நரம்பு, ரத்தம், உயிர் ராஜா“
“சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா பொன்விழா ஆண்டு 50“ என்ற தலைப்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் ஏராளமனோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிசய மனிதர்கள் பற்றி நான் புராணத்திலும், இதிகாசத்திலும் படித்திருக்கிறேன், ஆனால் என் கண்ணால் பார்த்த அதிசயம் இளையராஜா அவர்கள் தான் என்று கூறினார். உலகத்தில் வாழும் அனைத்து தமிழக மக்களின் நாடி, நரம்பு, ரத்தத்தில் அவரது பாடல்களும், அவரது பெயரும் ஊறியிருப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
இளையராஜா, 70, 80, 90-களில் இசையமைத்த பாடல்களை, தற்போது படங்களில் பயன்படுத்தினால் கூட, அந்த படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும் என்று கூறிய ரஜினிகாந்த், கூலி படத்தில் கூட இரண்டு பாடல்களை பயன்படுத்தியிருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இசையமைப்பாளராக எல்லோருக்கும் அவரை தெரியும், ஆனால், நான் அவரை ஒரு மாமனிதனாக பார்த்திருக்கிறேன் என்று அவர் கூறினார். ஆரம்பத்தில் ஒரு இளைஞனாக பார்த்த அவரை, புவனா ஒரு கேள்விக்குறி படத்தின்போது, ஜிப்பா, ருத்திராட்சத்துடன், பொட்டு வைத்து சாமி போல் பார்த்ததால், அப்போதிலிருந்து சாமி என்று அழைப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தனது ஆர்மோனியப் பெட்டியை வைத்துக்கொண்டு, ராகங்களை இளையராஜா அள்ளிக்கொடுப்பதாக பாராட்டினார் ரஜினிகாந்த். அவருடைய உலகமே வேறு நமது உலகமே வேறு என குறிப்பிட்ட ரஜினிகாந்த், இளையராஜாவின் அண்ணன், மனைவி, மகள் இறந்தபோது கூட, எந்த சலனமும் இல்லாமல் அவரது இசைப்பணி தொடர்ந்து கொண்டே இருந்தாக குறிப்பிட்டார்.
ஆனால், இவர்களுக்கு கலங்காத இளையராஜா, நண்பன் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைந்தபோது கண்ணீர் சிந்தியதாக அவர் கூறினார். மேலும், சிம்பொனி இசையமைக்க சென்றபோது, எனக்கு இல்லாத திமிர் யாருக்கு இருக்கும் என்று கேட்டார், அதற்கு யாரும் எதுவும் செல்லவில்லை, ஏனென்றால், அதற்கு தகுதியானவர் இளையராஜா என்று புழந்தார்.
82 வயதான நான் இன்னும் என்னென்ன செய்கிறேன் பாருங்கள் என்று அவர் கூறினார், அது தான் இளையராஜா.. இன்க்ரெடிபிள் இளையராஜா.. ஹேட் ஆஃப் தி கிரேட் மேஸ்ட்ரோ.. நீடூழி வாழ்க என வாழ்த்தினார் நடிகர் ரஜினிகாந்த்.
இறுதியாக, உங்களுடன்(இளையராஜா) பழகியதே எனக்கு மிகப்பெரிய பாக்கியம் என்றும், இளையராஜாவின் சுயசரிதையை விரைவில் திரைப்படமாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், என்னை விட்டால், நானே திரைக்கதை எழுதிக் கொடுக்கிறேன் என்றும் தெரிவித்தார்.