காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை  பாலாற்று மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில், இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். கார், லாரி எலக்ட்ரீசியன் ஆக உள்ள ஆனந்தன், தனது உதவியாளரான தேனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் உடன் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் களக்காட்டூரில் இருந்து ஓரிக்கை பாலாற்றும் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்து கொண்டிருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் பணி முடித்துக் கொண்டு களக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த யோக மூர்த்தி என்பவர், பாலாற்று மேம்பாலத்தில் எதிர் திசையில் வேகமாக வந்துள்ளார்.


நேர் மோதி விபத்துக்குள்ளானது

 

எதிர்பாராத விதமாக வேகமாக வந்த  இரண்டு இருசக்கர வாகனங்களும் ஓரிக்கை மேம்பாலத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் ஆனந்தன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே  துடிதுடித்து பரிதாபமாக  உயிரிழந்தார். அவருடன் வந்த சதீஷ்குமாரும் மற்றொரு இருசக்க வாகனத்தில் வந்த யோக மூர்த்தியும் படுகாயங்களுடன் துடிதுடித்துக் கொண்டிருந்த நிலையில் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் அவர்களை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 


காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை - Kanchipuram Government Hospital


 

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை

 

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யோகமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார், சதீஷ்குமார் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விபத்தில் உயிரிழந்த ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இரண்டு இருசக்கர வாகனங்களையும் மேம்பாலத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கல்லூரி மாணவர் ஓட்டிய இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி


சென்னை அடுத்த மதுரவாயல், எம்எம்டிஏ காலனி பகுதியை சேர்ந்தவர் பஷீர் பேகம் (60). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மோட்டார் சைக்கிள் பஷீர் பேகம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பஷீர் பேகம் பரிதாபமாக உயிரிழந்தார்.


மேலும் இந்த விபத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி வந்த கோயம்பேடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவரான லோகேஷ் (19) என்பவரது காலிலும் முறிவு ஏற்பட்டது. அவரு க்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் விசாரணை நடத்தி வருகிறார்.