ஆளுநர் ஆர்.என்.ரவியின் இல்லத் திருமண விழாவிற்காக பாரம்பரியமாக பசுமை நிறத்தில் காணப்பட்ட உதகை ராஜ்பவன் இல்லத்தின் நிறத்தை பச்சை நிறத்தில் வெள்ளை நிறமாக மாற்றியதாக வெளியான தகவலுக்கு இயற்கை ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
தமிழக ஆளுநரின் மகளுக்கு பிப்ரவரி 22ஆம் தேதி அதாவது நாளை, உதகை ராஜ்பவன் இல்லத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்தத் திருமணம் நிகழ்ச்சியை முன்னிட்டு, ஆளுநர் ரவி, 17 ஆம் தேதியே கோத்தகிரி உதகை ராஜ்பவன் வந்திருக்கிறார்.
இந்ததிருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்கள் வருவார்கள் என சொல்லப்படுகிறது. திருமண விழாவிற்கு வருகை தரும் விருந்தினர்களை நான்கு நாட்கள் தங்க வைத்து உபசரிக்க, கூடுதலாக ஜிம்கானா கிளப் மற்றும் ஜெம் பார்க் நட்சத்திர ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
உதகை ராஜ் பவன், 1876 ஆம் ஆண்டு, டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் என்ற பிரிட்டிஷ் ஆளுநரால் உருவாக்கப்பட்டது. அன்று இந்த மாளிகையின் பெயர் "கவர்மன்ட் அவுஸ்." இந்தியா சுதந்திரம் அடைந்த 1947க்கு பிறகு இந்த மாளிகை ராஜ்பவன் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த ராஜ்பவன் கட்டிடத்தின் பாதுகாப்பு கருதியே, 145 ஆண்டுகளாக வெளிப்பக்க சுவர் பச்சை வர்ணம் தீட்டப்பட்டு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில், திருமணத்திற்காக ராஜ்பவனின் பாரம்பரிய நிறத்தை மாற்றி பளிச்சென்று தெரியும் வெண்மை நிறத்திற்கு மாற்றியிருப்பது இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
முன்னாள் ஹரியான ஆளுநர்,மோஹிந்தர் குமாரின் செயலாளர் பேரன் பிறந்த நாள் விழா
மார்ச் : 31 - 2013 அன்று அம்மாநில ராஜ்பவனில் நடைபெற்ற போது, அம்மாநிலத்தில் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தமிழக ஆளுநரோ, ராஜ்பவனில் நான்கு நாள் விழா எடுக்கிறார்.