தமிழ்நாட்டில் தொழில், கல்வி உள்ளிட்ட பல காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் தங்களது ஊர்களை விட்டு சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது ஊர்களுக்கு எப்போதும் சென்று வர ஏதுவாக வெளியூர்களில் இருந்து தொலைதூரங்களுக்கு அரசுப்போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஓடும் பேருந்தில் ஒழுகிய மழைநீர்:
அந்த வகையில் சென்னையில் இருந்து நாகர்கோயில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மார்த்தாண்டம், மதுரை, தூத்துக்குடி, திருச்செந்தூர் என பல தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், சென்னையில் இருந்து நாகர்கோயில் நோக்கிச் சென்ற புதிய எஸ்.இ.டி.சி. அரசுப் பேருந்தின் உள்ளே மழைநீர் ஒழுகிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் அரசுப்பேருந்துகள் நிற்கும் புதிய பேருந்து நிலையமான கிளாம்பாக்கத்தில் இருந்து நாகர்கோயில் நோக்கி இரவில் பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.
பயணிகள் அவதி:
அப்போது செல்லும் வழியில் மழை பெய்தபோது, மழைநீர் கீழ் வரிசையில் இருந்த பயணியின் இருக்கை மீது வழிந்துள்ளது. இந்த இருக்கைக்கு மேலே படுக்கை வசதி கொண்ட இருக்கை உள்ளது. மேற்கூரையில் வழிந்த மழைநீர் படுக்கை வசதி கொண்ட இருக்கையை நனைத்து அதில் இருந்து கீழே உள்ள இருக்கைக்கு வழிந்துள்ளது.
இதைக்கண்ட பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இருக்கைகளில் இருந்த பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு கீழே பலரும் மழைக்காலம் வரும் முன்பு அரசுப்பேருந்துகளின் கூரைகளை சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த வீடியோவை கண்ட அரசுப் போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் அளித்துள்ள பதிலில், பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். பேருந்து வந்தவுடன் குறையை சரி செய்வதற்காக அந்த வாகனத்தை நிறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர். புதிய பேருந்துகள் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இயக்கப்படும் பழைய பேருந்துகளையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.