Rain Update: வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கனமழை குறித்து எச்சரித்திருந்தது. அதில், தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்கள்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதில் நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் பரவாலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக  கன மழையால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.


மேலும், சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்திருந்தது. 


அதன்படி, தலைநகர் சென்னையில் அதிகாலை மூன்று மணி முதல் கன மழை பெய்ததால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், சென்னை முழுவதும் நடந்து வரும் மழை நீர் வடிகால் பணிகளுக்கான வெட்டப்பட்ட குழிகளிலும் மழை நீர் தேங்கி , பணிகளை விரைவாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும்,  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


அதேபோல், செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும், செஞ்சி, அம்மம்பட்டு, அனந்த புரம், மேல் மலையனூர் மற்றும் வல்லம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பூண்டியில் அமைந்துள்ள சத்திய மூர்த்தி அணைக்கு, தொடர் கனமழையால் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 55 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 265 கன அடியாக வந்து கொண்டு உள்ளது. 


கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ஈரோடு, சத்தியமங்கலம்,  கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் அதிக மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் அதிக மழை பெய்து சாலைகளில் மழை நீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. 


அதேபோல், காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் தொடங்கவிருந்த நிலையில் தொடர் கன மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு விடுமுறை அறிவித்துள்ளார். மேலும், மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. 


  குறிப்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து வருவதால் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.  அதேபோல், ராமநாத புரம் மாவட்டத்தில் மழை பெய்யும் இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 


தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை,  திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.