மழையில் களப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மீண்டும் கனமழை பெய்தாலும் அரசு தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, சென்ன உள்ளிட்ட மாநிலத்தில் நான்கு வட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. மேலும் 12 மாவட்டங்களில் கனமழை பொழியக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டு இருந்தது.


கலங்கிய சென்னைவாசிகள், நகர்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி


இதனால், ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க தமிழக அரசு இயந்திரம் முழு வீச்சில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. கடந்த ஆண்டைப் போல மீண்டும் பாதிக்கப்படுவோமோ என சென்னை வாசிகள் கலக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில்  சென்னைக்கான கனமழை மெல்ல நகர்ந்து, தற்போது ஆந்திர மாநிலத்தில் கொட்டி வருகிறது.


இதற்கிடையே கடந்த 2 நாள் மழையின்போது தீவிரமாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு, சென்னை, சேப்பாக்கத்தில் உதவிப் பொருட்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சிற்றுண்டி, உடைகள், துண்டு, பிரெட், பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. உதயநிதி ஸ்டாலினுடன் தயாநிதி மாறன் எம்.பி., திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.


தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி கூறியதாவது:


’’முதல்வரின் ஆலோசனைக்குப் பிறகு அனைத்து விதமான அதிகாரிகள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் களத்தில் இறங்கி, பணியாற்றினர். இன்று மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பெய்யவில்லை. மீண்டும் கன மழை பெய்தால், அதை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயார் நிலையில் உள்ளது.


தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி


மழையின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’.


இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  


இந்த நிலையில் சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை, எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.