Southern Rain Damage: மழையால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்யும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தூத்துக்குடி செல்கிறார்.


தென்மாவட்டங்களில் மழை சேதம்:


மிக்ஜம் புயலால் பெய்த பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, சென்னை உள்ளிட்ட நான்கு வடமாவட்டங்கள் தற்போது தான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. அதற்குள் கடந்த 17 மற்றும் 18ம் தேதிகளில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் கனமழை கொட்ட் தீர்த்தது. சில பகுதிகளில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழையை காட்டிலும் அதிகமான மழை, ஒரே நாளில் கொட்டி தீர்த்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


பல ஏரி, குளங்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பல கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனால், ஏராளமான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து வீடுகளில் முடங்கியுள்ளனர். ஆபத்தான பகுதிகளில் தங்கியிருக்கும் நபர்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ள பாதிப்பால் தென்மாவட்டங்களில் ஏராளமானோர் வாழ்வாதாரங்களை இழந்ததோடு, உட்கட்டமைப்பு வசதிகளும் கடுமையாக சேதமடைந்துள்ளது. அதேநேரம், மழை நீர் தொடங்கி வெள்ள நீர் வடிய தொடங்கியதால், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


மத்தியக் குழு ஆய்வு:


இந்நிலையில் தான் அதி கனமழை வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்தியக்குழு இன்று ஆய்வு செய்கிறது. அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை குழு ஆலோசகர் கர்னல் ஏ.பி.சிங் தலைமையிலான குழு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கனமழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது. ஆய்வுக்கு பின் வெள்ள பாதிப்பு விவரங்களை இந்த குழு மத்திய அரசுக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளது.


முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம் மாற்றம்:


இதனிடையே, இன்று தூத்துக்குடி சென்று ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். ஆனால், மத்திய குழு வருகையை முன்னிட்டு முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி,  டெல்லியில் பிரதமர் மோடியை நேற்றிரவு சந்தித்த பின்னர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை சென்னை திரும்புகிறார்.


தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் அவரது தலைமையில் 4 மாவட்ட வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. அதன்பிறகு,  முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று இரவு விமானம் மூலம் மதுரை செல்கிறார். அங்கிருந்து நாளை தூத்துக்குடி மாவட்டம் சென்று அங்கு வெள்ள பாதிப்பு பகுதிகள், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.