Chennai Weather Update: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன் 10 முதல் 12-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும்.

Continues below advertisement

அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் உள்ள நந்தனத்தில் 7 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், விருதுநகரில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் 12-ஆம் தேதிவரை மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் வரும் 10-ஆம் தேதி வரை மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று மற்றும் நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவர்கள் மேலே குறிப்பிட்ட நாட்களில் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கேரளம், கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இன்று முதல் 12-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தென்மேற்கு மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement