தமிழ்நாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் இருக்கும்போது பணியமர்த்தப்பட்ட 745 உதவி காவல் ஆய்வாளர்களில் கிட்டத்தட்ட 450க்கும் மேற்பட்டோருக்கு 13 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. ஆனால், 2011ஆம் ஆண்டு ஆயுதப்படை உள்ளிட்ட பிரிவுகளில் எஸ்.ஐக்களாக பணியில் சேர்ந்த பலர், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுவிட்ட நிலையில், அவர்களுக்கு முன்னதாக காவல்துறையில் சேர்ந்த 2008ஆம் ஆண்டு பேட்ஜ் எஸ்.ஐக்களுக்கு இன்னும் பதவி உயர்வு வழங்கப்படாதது அவர்களிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஜூனியர்களுக்கு புரோமோஷன் கிடைத்துவிட்ட நிலையில், சீனியர்களான தங்களுக்கு இன்னும் பதவி உயர்வு கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவிக்கும் 2008ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர்கள், கடந்த திமுக ஆட்சியில் பணியர்த்தப்பட்ட எங்களுக்கு, தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில், பதவி உயர்வு வழங்கி உத்தரவிடவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆட்சி செய்த அதிமுக அரசின் கவனத்திற்கு பல முறை இதனை கொண்டுச்சென்றபோதும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றஞ்சுமத்தும் போலீசார், இந்த ஆட்சியிலாவது தங்களுக்கு விடிவு கிடைக்குமா என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நேரடி தேர்வின் மூலம் நியமிக்கப்பட்ட உதவி காவல் ஆய்வாளர்களுக்கு 10 வருடத்திற்கு ஒரு முறை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்பது விதியாக இருக்கும் நிலையில், 13 ஆண்டுகளை கடக்கும் நிலையில் உள்ள இவர்களுக்கு இன்னும் புரோமோஷன் வழங்கப்படாததால், அடுத்தடுத்த பதவி உயர்வுகளும், ஊதியமும் பாதிப்புக்கு உள்ளாகும் என வேதனைப்படுகிறார்கள்.
இரவு பகலாக எந்நேரமும் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரின் பணி, இந்த கொரோனா காலக்கட்டத்தில் பல மடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டும், சிலர் உயிரிழந்தும் வரும் நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு சரியான காலக்கட்டத்தில் பதவி உயர்வு வழங்குவதுதான் நியாயமான நடவடிக்கையாக இருக்கும் என ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
அதேபோல், 2008 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கினால்தான், 2011ல் சேர்ந்து 10 ஆண்டுகளை கடந்துவிட்ட எஸ்.ஐக்களுக்கும் அடுத்த பதவி உயர்வு வழங்க முடியும். இல்லையென்றால் இன்னும் அதிக காலங்கள் இவர்களும் பதவி உயர்விற்காக காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்படும். பதவி ஏற்றது முதல் பல்வேறு நடவடிக்கைகளையும், காவல்துறையினருக்கான சலுகைகளையும் அறிவித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் பணியாற்றும் காவலர்களின் கோரிக்கைகளையும் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பார் என தீர்க்கமாக நம்பியிருக்கின்றனர் .