மூன்று நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 7 மணிக்குள் எங்கெல்லாம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


மழை எச்சரிக்கை குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை 7 மணிக்குள் மழைப் பொழிவு இருக்கும் என எச்சரித்துள்ளது. 


மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதனால் வங்கக் கடலில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 






இதுதொடர்பான அறிக்கையின்படி, வங்கக்கடலில்  மையம் கொண்டு இருந்த, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து,  கூடுதல் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.


காற்றழுத்த தாழ்வு மண்டலம்:


அதன்படி, இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே 600 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 670 கிமீ தொலைவிலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  மையம் நிலை கொண்டுள்ளது. தற்போதைக்கு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கடலில் அதே பகுதியில் நீடிக்கும் எனவும், மெதுவாக மேற்கு - வடமேற்கு திசையில், புதுச்சேரி - தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






மழைக்கான வாய்ப்பு:


21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.


22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை,  24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


20.11.2022 முதல் 22.11.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


21.11.2022 மற்றும் 22.11.2022:  மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட பகுதிகளுக்கு மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல வேண்டாமென மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.