ரயில் பயணத்தை விரும்பும் மக்கள்
நவீன காலத்தில் போக்குவரத்து சேவைகள் பல வகைகளிலும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் ரயில் சேவை மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. நீண்ட தூரம் பயணத்திற்கு பொதுமக்கள் பெரிதும் விரும்புவது ரயில் பயணத்தை மட்டும் தான். பாதுகாப்பு, குறைந்த கட்டணம், அடிப்படை வசதிகள் இருப்பதால் ரயிலில் பயணம் செய்வதை பொதுமக்கள் விரும்புவார்கள். இதன் காரணமாகவே ரயில்களில் தினந்தோறும் கூட்டமானது அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் தினந்தோறும் பல ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மிடில் பெர்த்தில் தூங்கும் நேரம் என்ன.?
இந்த நிலையில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் வகையில் 3 அடுக்கு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகள் அதிகளவு இந்திய ரயில்வேயில் பயன்படுத்தப்படுகிறது. இதில் லோயர் பெர்த் பெரும்பாலும் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஒதுக்கப்படும். ரயிலில் மேல் இருக்கை (Upper Berth) மற்றும் மிடில் பெர்த்தை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துவார்கள். இதில் மிடில் பெர்த்தில் எப்போது படுக்கலாம் என்ற பிரச்சனையானது ரயில் பயணத்தின் போது ஏற்படும்.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை
குறிப்பாக காலை நேரத்தில் ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த்தில் பயணிகள் படுப்பதால் கீழ் படுக்கையில் பயணிகளால் உட்கார்ந்து பயணிக்க முடியாத நிலை நீடிக்கும். இதனால் ரயில் பயணிகளுக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே ரயிலில் படுக்கை வசதிகளை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகள் ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. அதன் படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மிடில் பெர்த்தில் படுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற வேண்டும்
மேலும் மற்ற நேரங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் உட்கார்ந்து செல்லும் வகையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், அதே நேரம் இந்த விதியில் நோயாளிகள், கர்ப்பிணிகள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு மிடில் பெர்த் ஒதுக்கும்பட்சத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தூங்க விரும்பினால் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்று பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் படுக்கையில் தூங்குவதற்கு எந்தவித நேர வரம்பும் இல்லையெனவும் கூறப்பட்டுள்ளது. மிடில் பெர்த்தில் குறிப்பிட்ட கால அளவை தூங்க விரும்புபவர்கள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் அளித்தால் இதற்கு உரிய தீர்வை அளிப்பார் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
