ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட அழிவு மற்றும் உயிரிழப்புகள் பற்றிய செய்தியால் வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். சூறாவளி தமிழ்நாட்டை விட்டு விலகி செல்லும் நிலையில்,  தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் ஒடிசாவின் ​​காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்கள், அந்தந்த அரசாங்கத்தின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.






அமித் ஷா உடன் முதலமைச்சர் உரையாடல்:


இதேபோன்று பல்வேறு தலைவர்களும் மிக்ஜாம் பாதிப்புகளை சீர்படுத்த தமிழகத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 'மிக்ஜாம்' புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அப்போது, 
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.