தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி:
கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய அங்கமாக தி.மு.க. இருந்தது. அதன் பிறகு, சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, கூட்டணியில் இருந்து வெளியேறி 2014 மக்களவை தேர்தலை இரண்டு கட்சிகளும் தனியாக சந்தித்தன. ஆனால், அதற்கு பிறகு, 2016ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணியாக சந்தித்தன. அதில், தி.மு.க. தோல்வியை சந்தித்தாலும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக பெரிய வெற்றியை பதிவு செய்தது.
ஒற்றுமை நடைபயணம்:
தேனியை தவிர புதுச்சேரி உள்பட 39 தொகுதிகளில் தி.மு.க. வெற்றிபெற்றது. இந்த வெற்றி கூட்டணி 2021ஆம் ஆண்டும் தொடர்ந்தது. 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, நாடு முழுவதும் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து. இதன் காரணமாக, பல்வேறு கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகின. ஆனால், தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் தற்போது வரை நல்லுறவை பேணி வருகின்றன.
இதற்கு மத்தியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதை, திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின்தான் தொடங்கி வைத்தார்.
மதவெறுப்பு அரசியல்:
2019ஆம் ஆண்டு, ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழிந்த முதல் அரசியல் தலைவரும் ஸ்டாலின்தான். இப்படி, ராகுல் காந்தியை ஸ்டாலின் தொடர்ந்து ஆதரித்து வரும் நிலையில், தற்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
"மறுமலர்ச்சிக்கான பாதையில் காங்கிரஸ் உள்ளது. தேசிய அளவில் அக்கட்சி முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை" என பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
"காங்கிரஸின் கட்சி கட்டமைப்பை வலுப்படுத்த சோனியா காந்தி மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கத் தொடங்கியுள்ளன. சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் மக்களிடையே பெரும் ஆரவாரத்தை கிளப்பியுள்ளது. இது நாட்டில் வெளிப்படையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க.வின் மத வெறுப்பு அரசியலை ராகுல் காந்தி எதிர்த்து வருகிறார். இந்த குணங்களே பா.ஜ.க.வின் குறுகிய மனப்பான்மை அரசியலுக்கு அவரை மாற்று மருந்தாக ஆக்கியுள்ளது" என்றார்.
சமீபத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா எழுதிய புத்தக வெளியீட்டு விழாவிலும் ராகுல் காந்திக்கு ஆதரவாக ஸ்டாலின் பேசியிருந்தார்.