காரைக்குடியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,” ராகுல் காந்தி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் கண்டனம் மற்றும் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து போராட்டம் மற்றும் ஆர்பாட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 


ஒரு வகையில், எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை நரேந்திர மோடி அரசாங்கம் உருவாக்கி தந்துள்ளது. இந்த வழக்கை பற்றியெல்லாம் நான் நுணுக்கமாக பேச போவது கிடையாது. ஆனால், சில செய்திகளை உங்கள் வாயிலாக மக்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதற்கான கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 


2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி ராகுல் காந்தி கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த தேர்தல் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்கள் கேள்வி கேட்கிறார்கள் அதற்கு ராகுல் காந்தியும் ஒரு வாசகத்தை சொல்கிறார். இது முடிந்து சரியாக மூன்று நாட்கள் கழித்து பியூர்னேஸ் மோடி என்பவர் குஜராத் மாநிலம் சூரத்தில் வழக்கு தொடர்கிறார். 


கோலாருக்கும், சூரத்துக்கும் என்ன சம்மந்தம். பேசியது கோலாரில், வழக்கு தொடர்ந்து சூரத்தில்.. அப்போது தொடர்ந்த இந்த வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் இருந்தது. புகார் அளித்தவர் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. திடீரென கடந்த ஆண்டு இந்த வழக்கை விசாரிக்க கூடாது என தெரிவித்து, தடையும் வாங்குகிறார். அந்த தடையும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இருக்கு. அப்போது, புதிதாக சூரத் நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதி வருகிறார். 


இந்தநிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடி மற்றும் தனியார் நிறுவனம் குறித்து ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டார்.  ராகுல் காந்தி பேசியதை அவை தலைவர் ஒரு சிலவற்றை தூக்கிவிட்டார். 


தொடர்ந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு சரியாக என்பது நாள் கழித்து தடையை நீக்குமாறு பியூர்னேஸ் மோடி மனு அளிக்கிறார். 


இந்த வழக்கு மீண்டும் மார்ச் 21ம் தேதி தொடங்குகிறது. 23ம் தேதி ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கப்படுகிறது. 24 ம் தேதி ராகுல் காந்தி மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சபாநாயகர் இதற்கான அறிவிப்பை தந்தாரா தெரியவில்லை..? இதெல்லாம் மர்மமாக இருக்கிறது. இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ” என தெரிவித்தார்.