" பான் " எண் கட்டாயம்
தமிழகத்தில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும் போது அதற்கான பத்திரங்களை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதில், சொத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் பத்திரத்தில் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக இருந்தது. தற்போது, இந்த விதிமுறை திருத்தப்பட்டதால், 20 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் இருந்தால் மட்டுமே, 'பான்' எண் குறிப்பிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறான "பான்" எண்கள் கண்டுபிடிப்பு
20 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளின் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் நிலையில் அது குறித்த விபரங்களை, சார் - பதிவாளர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதில் பத்திரத்தின் மதிப்பு, அதை வாங்கியவர், விற்றவர், அவர்களின், 'பான் எண்' போன்ற தகவல்கள், வருமான வரித்துறைக்கு அளிக்கப்படும்.
அந்த தகவல்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்ட நபர்கள் வருமான வரி செலுத்தியது குறித்து, வருமான வரித்துறை ஆய்வு செய்யும். சமீபத்தில் வருமான வரித்துறை மேற்கொண்ட ஆய்வில், ஏராளமான நபர்கள், சொத்து பத்திரத்தில், தவறான 'பான்' எண்களை குறிப்பிட்டிருப்பது தெரிய வந்தது.
உதாரணமாக, புது டில்லியை ஒட்டி, ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் மட்டும், 2.5 லட்சம் சொத்து பரிமாற்றங்களில், தவறான 'பான்' எண் குறிப்பிட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. குறிப்பிட்ட சில மாநிலங்களில், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பரிமாற்றங்களில், தவறான பான் எண் குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சொத்து பத்திரங்களில், தவறான பான் எண் கொடுத்தவர்களுக்கு, சார் - பதிவாளர்கள் வாயிலாக தகவல் தெரிவிக்க, வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது ;
சொத்து பரிமாற்றத்தின் போது பத்திரத்தில் குறிப்பிடப்படும் ஆதார் எண்ணை சரி பார்க்க தற்போது வசதி உள்ளது. ஆனால், பான் எண்ணை சரி பார்ப்பதற்கான வசதி இல்லை. இதனால், யார் தவறான எண்ணை குறிப்பிடுகின்றனர் என்பதை கண்டுபிடிக்க முடிவதில்லை.
வருமான வரித்துறை கண்டுபிடித்து தெரிவித்தால் அதை சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிப்பதிலும் பல்வேறு நடைமுறை பிரச்னைகள் ஏற்படுகின்றன. இவ்விஷயத்தில் தெளிவான வழிமுறைகள் இல்லாததால் நடவடிக்கை எடுப்பது சிரமமாக உள்ளது என இவ்வாறு அவர் கூறினார்
