சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சிப்காட் தொழில்பேட்டை அமைப்பது தொடர்பாக திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கேட்ட கேள்விக்கு ஆன்மீக ரீதியாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலும், அதனை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளும் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ராக்கிபேட்டை வட்டத்தில் சிப்காட் அமைக்கும் கருத்துரு தற்போது அரசிடம் இல்லை.
எஸ்.சந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ: திருத்தணி தொகுதி மிகவும் பின் தங்கிய பகுதியாக உள்ளதால் ராக்கிபேட்டைக்கு தொழில்பேட்டை கிடைக்குமா? அதற்கான ராஜபாட்டையை அமைச்சர் அவர்கள் அமைத்து தருவாரா? என்பதை அறிய விரும்புகிறேன்.
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: எல்லா சாலைகளும் ரோம் நகரை நோக்கி என்று சொல்வார்கள், அதுபோல் தொழில் வளர்ச்சியில் எல்லா சாலைகளும் திருவள்ளூர் மாவட்டத்தை நோக்கி எனும் நிலைமை உள்ளது. 1984ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை, 2008இல் தேர்வாய்கண்டிகை, 2009இல் மப்பேடு, தற்போது மானலூரில் என வரிசையாக அம்மாவட்டத்தில் தொழிற்பேட்டைகள் அமைந்துள்ளது. மேலும் மானலூர் நிலை மூன்றிலும் புதிதாக சிப்காட் தொழிற் பூங்கா அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். 1984ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் முக்கியமான தொழில் கேந்திரமாக உருவாகி வருகிறது. திருத்தணி தொகுதியில் உள்ள தொழில் முனைவோர்கள், அல்லது தொழில்மனைகள் தேவைப்படுவோர் நான் குறிப்பிட்டுள்ள தொழில்மனைகள் மூலம் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
எஸ்.சந்திரன், திருத்தணி எம்.எல்.ஏ: திருச்சுழி அருள்மிகு திருமேனிநாதர் கோயிலின் சிறப்பு, ’இல்லை என்று சொல்லாமல் வரம் கொடுக்கும்’ சிவபெருமான் இருக்கிறார். எனவே திருச்சுழி தொகுதியில் இருந்து வந்திருக்க கூடிய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இல்லை என்று சொல்லாமல் திருத்தணி தொகுதிக்கு தொழிற்பேட்டையை வழங்குவாரா?
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: தேவார பாடல் பெற்ற தலங்களிலே பாண்டி பதிநான்கு என சொல்லக்கூடிய தலங்களில் திருச்சுழியும் ஒன்று, சுந்தரமூர்த்தி நாயனார் அங்கு பாடினார், ’கவ்வை கடல் கதறி குணர்’ என்று தொடங்க கூடிய பதிகம் மிகுந்த பிரசத்தி பெற்ற பதிகம் என்பதும் உண்மைதான், ஆனால் அவருடைய ஊருக்கும் அந்த சிறப்பு உள்ளது. திருத்தணியும் அறுபடை வீடுகளில் ஒரு முக்கியமான வீடு. எனவே திருச்சுழியில் இருக்க கூடிய திருமேனி நாத சுவாமி, திருத்தணியில் இருக்க கூடிய முருகன் ஆணைக்கு கட்டுப்படக்கூடியவராக இருந்தாலும், தகப்பன் சுவாமி என்ற பெருமையை முருகன் பெற்றிருந்தாலும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முறை மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற வகையில் திருச்சுழி திருமேனிநாத சுவாமி சொல்வதை திருத்தணி முருகன் கேட்டுகொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் (அவையில் சிரிப்பலை...!)
ஐ.பி.செந்தில் குமார், பழனி எம்.எல்.ஏ: கடந்த கேள்விக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தகப்பன் சுவாமி முருகன் என்று சொன்னார். அந்த முருகன் வீற்றிருக்கும் பழனியில் இருந்து என்னுடைய கேள்வி என்னவென்றால், முழுமையாக விவசாயத்தை நம்பி இருக்க கூடிய பழனியிலே ஒரு சிப்காட் தொழில்கூடம் அமைக்க அரசு முன்வர வேண்டும்.
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: திருத்தணியை தொடர்ந்து பழனி வருகிறது, திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அண்ணன் ராஜன் செல்லப்பா அவர்கள் தலையாட்டுகிறார்கள். ஆனால் தொழில் மனைகளை அமைப்பதை பொறுத்தமட்டில் அங்கே இருக்கும் போக்குவரத்து, நீர், மின்சார வசதி போன்ற பல்வேறு வசதிகள் தவிர அங்கே இருக்கிற தொழில்முனை தேவைகளை கொண்டு முடிவெடுக்க வேண்டும். பழனி வளர்ந்து வரும் பகுதி என்பதில் மாற்று கருத்து இல்லை, விவசாயம் சார்ந்த பகுதியாக இருந்தாலும் தொழில்வளம் தேவைப்படக்கூடிய ஒரு பகுதி என்பதை மாண்புமிகு உறுப்பினரோடு சேர்ந்து நானும் உணர்ந்து இருக்கிறேன். எனவே வரும் காலங்களிலே திண்டுக்கல் மாவட்டத்திலே தொழிற்பூங்காவை உருவாக்கும் சூழல் உருவாகும் போது நிச்சயமாக பழனியை கருத்தில் கொள்வேன்.
துரைமுருகன், அவை முன்னவர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே..! மாண்புமிகு உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்கு என்னென்ன வேண்டுமோ, அதை உரிமையுடன் கேட்கனும். ஆனால் சம்பந்தமே இல்லாமல் என் பேர இழுத்து, முருகன் கோயில்... முருகன்... முருகன்னு வந்தா இதென்ன சமாச்சாரம் என்று தெரியல... (அவையில் சிரிப்பலை)