செய்தியாளன் என்பவனுக்கு இரவு பகல் கிடையாது. அவனுக்கு தென்றலும் புயலும் ஒன்றுதான். 8 மணி நேரம் வேலை என்பது எல்லாம் ஏட்டளவில்தான். ஒரு விஷயம் நடக்கிறதென்றால் அவன் முதலில் அங்கு இருக்க வேண்டும். அதற்கான எல்லா தயாரிப்புகளோடும்தான் அவன் ஒவ்வொருநாளும் இருக்கிறான். இப்படிதான் இந்த வேலை இருக்கும் என்று தெரிந்துதான், விரும்பிதான் அவன் இந்த துறையையே தேர்ந்தெடுக்கிறான். அப்படி இருந்தால்தான் அவன் கள செய்தியாளனாகவே இருக்க முடியும்.
எப்போது வீடு திரும்புவோம் என தெரியாது
வீட்டை வீட்டு கிளம்புவது எப்போது, திரும்பி வருவது எப்போது என்ற எந்த நிச்சயமும் செய்தியாளனுக்கு இருந்ததில்லை. அப்படிதான், சந்திராயன் 3 விண்கலம் விண்ணிற்கு கொண்டு சென்ற விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் இறங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நேரலை செய்ய நெல்லையில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயண் இல்லத்திற்கு சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை ஒளிப்பதிவாளர் சங்கர் இன்னும் வீடு திரும்பவில்லை. இனி அவர் ஒருபோதும் வீடு திரும்பவும் மாட்டார்.
சில நொடிகளில் போன உயிர்
தொடர் நேரலையை முடித்துவிட்டு, செய்தியாளர்கள் குழுவுடன் நெல்லை திரும்பும்போது நாங்குநேரி அருகே ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துவிட்டார். அலைச்சலும் அசதியுமாக திருவனந்தபுரத்தில் இருந்து ஓய்வே எடுக்காமல் உடனே கிளம்பிய சங்கர்தான் காரை ஓட்டியிருக்கிறார். அவருடன் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மண்டல தலைமை செய்தியாளர் நாகராஜ், மற்றொரு ஒளிப்பதிவாளர் நாராயணமூர்த்தி உள்ளிட்ட மூன்று பேர் பயணம் செய்திருக்கின்றனர். நாங்குநேரி டோல்கேட் அருகே வரும்போது சங்கர் சற்று கண் அயர்ந்துவிட, சில நொடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது. காரை ஓட்டிய சங்கர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரைவிட்டிருக்கிறார். நாகராஜூம், சங்கரநாராயணனும், மற்றொரு ஒளிப்பதிவாளரும் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கின்றனர்.
’பிறந்தநாளை கொண்டாட வராத அப்பா’
உயிரிழந்த ஒளிப்பதிவாளர் சங்கருக்கு 7 வயதில் மகன் இருக்கிறான். சங்கர் திரும்பி வந்ததும் தனது பிறந்தநாளை கொண்டாடலாம் என காத்துக்கொண்டிருந்த அவரது மகனின் கனவு கலைந்துபோய் இருக்கிறது. இனி எத்தனை பிறந்தநாள் வந்தாலும் சங்கரால் அதை கொண்டாட வரவும் முடியாது. சங்கரின் இறப்பால் அவர் மனைவியும் குடும்பமும் உடைந்துபோய் இருக்கின்றனர். எத்தனை ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் அவர்களை அவ்வளவு எளிதில் தேற்றிவிடமுடியாது. பறிபோன உயிரை மட்டும் மீண்டும் கொண்டுவந்துவிட முடிந்த வித்தை யாருக்கேனும் இப்போது தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால், அப்படி எதையும் செய்துவிட முடியாத கையறு நிலையில்தான் மனிதர்கள் இருக்கிறார்கள்.
அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் கொண்ட சங்கரின் இழப்பு புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கும் அவரது குடும்பத்திற்கும் மட்டுமான இழப்பு இல்லை. ஒட்டுமொத்த தமிழ் ஊடக உலகிற்கே பேரிழப்பு. பல்வேறு, இக்கட்டான சூழலில் சிறப்பாக பணியாற்றியவர் என்ற பெயரையும் யாரிடமும் கோபப்படாத சாந்தமான குணமும் கொண்ட சங்கரின் இழப்பிற்கு ’ABP நாடு’ செய்தி நிறுவனம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
பத்திரிகையாளன் என்பவன் இன்றிலிருந்து நாளையை தொடுபவனாக, எல்லாவற்றையும் எழுதிவிட்டு காற்றைபோல எங்கும் நிற்காதவனாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில், ஏதோ ஒரு சூழலில் அவனையும் இந்த விதி விட்டுவைக்கவில்லை.