சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கு தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில், பொன்முடி போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. 


கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி பொறுப்பு வகித்தார். அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 1.72 கோடி சொத்து குவித்தாக அவர் மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2011ம் ஆண்டு பொன்முடி மீதும், அவரது மனைவி விசாலாட்சி மீதும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் முடிவில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, கடந்த 2016ம் ஆண்டு இருவரையும் விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது.


சிறைத்தண்டனை:


இதையடுத்து, கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கின் விசாரணை கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், கடந்தாண்டு அதாவது 2023ஆம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி இருவரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து, கடந்த டிசம்பர் 21ம் தேதி பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், தலா ரூபாய் 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்கு ஆளான பொன்முடி தனது உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியை இழந்தார். பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அவருக்கும் அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை ஒரு மாத காலம் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.


மேல்முறையீடு:


இந்த சூழலில்  பொன்முடி தரப்பு வழக்கறிஞர் அவருக்கும், அவரது மனைவிக்கும் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜனவரி 12ஆம் தேதி  முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் சிறையில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவின் மீது உச்சநீதிமன்றம் சிறைதண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.