புதுச்சேரி : புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் தேவை இருந்தாலன்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

Continues below advertisement

புதுச்சேரி ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கிய வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து உருவான புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பரவலாக மழை கொட்டியது. இதனையடுத்து சில வாரங்கள் மழை ஓய்வு கொடுத்திருந்த நிலையில், மீண்டும் பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில் தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சிதென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தற்போது மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வருகிறது.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

இதன் காரணமாக இன்று (16-11-2025) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்நிலையில் கன மழை பெய்யும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Continues below advertisement

காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும்

 மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை அறிவிப்பு :

தற்போது நிலவி வரும் வட கிழக்கு பருவகாலத்தின் தொடர்ச்சியாக, இந்திய வானிலை ஆய்வு மையம், வங்காள விரிகுடா கடற்பரப்பின் மீது காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்றும், அதனால் இன்று (16.11.2025) மற்றும் நாளை கன மற்றும் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் காற்று மணிக்கு 55 கி. மீ. வரை வீசக்கூடும் என்றும், புதுச்சேரி பகுதிக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் மிக பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடனும் இருக்கும் படியும் தேவை இருந்தாலன்றி வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், அரசு அளித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுவதுடன், வதந்திகளை நம்பாமல் அரசு அளிக்கும் செய்திகளை மட்டுமே பின் பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அவசர உதவிக்கு !

பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு இலவச அழைப்பு எண்களான 1077, 1070, 112 அல்லது 9488981070 என்கிற எண்ணில் வாட்சப் தகவல் ஆகியவற்றின் வழியாக தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.

நாளை கன மழை

நாளை (17-11-2025) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு விடுத்து எச்சரிக்கை சுற்றறிக்கையில், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதே போல நாளை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பிருப்பதாகவும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளார்