புதுச்சேரி உப்பளத்தில் இன்று காலை 10.30 மணிக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர்  விஜய்யின் புதுச்சேரி மாநில மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக உப்பளம் மைதானத்தில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் உரையாற்ற உள்ளார். இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு வந்த ஒருவர் துப்பாக்கியுடன் ஒருவர் நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

புதுச்சேரியில் விஜய் பங்கேற்று உரையாற்றும் பொதுக்கூட்டம்

உப்பளம் மைதானத்தில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழக பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்ற உள்ள நிலையில், காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இந்த நிகழ்ச்சிக்குப் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு வைத்திருக்கும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட தவெக, கழகத் தோழர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாக தலைமை நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறி, தனது தொண்டர்களுக்கு 10 கட்டளைகளும் தவெக சார்பில் வெளியிடப்பட்டது.

Continues below advertisement

துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரை பிடித்த போலீசார்

இந்நிலையில், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வருவோரை காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பின்னரே உள்ளே அனுப்புகின்றனர். இந்நிலையில், தவெக பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த ஒருவர் துப்பாக்கியுடன் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் உள்ளே நுழைய முற்பட்டபோது போலீசார் அவரை மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்துள்ளனர். அப்போது அது அலாரம் எழுப்பியதால் சந்தேகமடைந்த போலீசார் அவரை முழுவதும் சோதித்தனர். அப்போது அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.

துப்பாக்கியுடன் வந்த நபர், சிவகங்கையைச் சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் டேவிட் என் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.