புதுச்சேரி : ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் மாதாந்திர மானிய உதவி நிறுத்தப்படும் என்று புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ரேஷன் அட்டைகளுடன் ஆதார் மற்றும் கைப்பேசி எண்களை உடனடியாக இணைக்க வேண்டும் என்றும், தவறினால் மாதாந்திர உணவு தானிய மானிய உதவித் தொகை நிறுத்தி வைக்கப்படும் என்றும் புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை எச்சரித்துள்ளது.
மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை:
புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் அரிசி வழங்குவதற்குப் பதிலாக, பயனாளிகளின் வங்கித் கணக்கில் நேரடி மானிய உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் 'பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் இந்த மாதாந்திர உணவு தானிய மானியம் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறை (CBDC) கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
1.02 லட்சம் பயனாளிகளுக்கு டிஜிட்டல் வாலட்:
கடந்த 3 மாதங்களாக நியாயவிலைக் கடைகள் வாயிலாக சிறப்பு முகாம்கள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, இதுவரை 1.6 லட்சம் பயனாளிகள் தங்கள் கைப்பேசி எண்களைப் பதிவு செய்து கணக்குடன் இணைத்துள்ளனர். இதில் முதற்கட்டமாக 1.02 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் 2026-க்கான உணவு தானிய மானியம் மத்திய வங்கி டிஜிட்டல் நாணய முறையில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு, அவர்களுக்கான டிஜிட்டல் வாலட்களும் (Digital Wallets) வழங்கப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 21 கடைசி நாள் - துறை எச்சரிக்கை:
இதுவரை தங்கள் ரேஷன் அட்டைகளுடன் கைப்பேசி எண்கள் மற்றும் ஆதார் விவரங்களை இணைக்காத பயனாளிகள், வரும் ஆகஸ்ட் 21, 2026-க்குள் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகள் அல்லது குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தை அணுகி உடனடியாக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இந்த கெடுவுக்குள் எண்களை இணைக்கத் தவறும் அட்டைதாரர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களுக்கான உணவு தானிய மானிய உதவித் தொகை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்று குடிமைப் பொருள் வழங்கல் துறை தனது செய்திக்குறிப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
