தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடந்து வருகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் அவதிப்பட்ட தவெக-விற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்து ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தனர். இதில் விசிக-வின் பங்கு மிகப்பெரியது ஆகும்.

Continues below advertisement

முன்னுக்கு பின் முரணாக பேசி வந்த திருமா:

கடைசியாக விசிக அளித்த ஆதரவின் அடிப்படையிலே தவெக-வின் பெரும்பான்மை உறுதியானது. விஜய்யின் ஆட்சி அமைய உத்தரவாதம் அளித்தாலும், அமைச்சரவையில் பங்கு பெற்றாலும் திருமாவின் பேட்டிகள், அவ்வப்போது அவர் கூறி வந்த கருத்துக்கள், திமுக-வுடன் காட்டி வந்த நெருக்கம் தவெக அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியே வந்தது.

அதிமுக எம்எல்ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், பாமக-வுடன் தவெக நெருக்கம் காட்டியது. பாமக வசம் 4 சட்டமன்ற எம்எல்ஏ-க்கள் இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி பெரியளவில் ஸ்திரத்தன்மையுடன் இல்லாததாலும் தவெக-விடம் இருந்து அழைப்பு வந்தால் செல்வதற்கு பாமக-வும் தயாராக இருந்தது.

Continues below advertisement

கூட்டணியை உறுதி செய்த விசிக:

இது விசிக-வினருக்கும், திருமாவளவனுக்கும் சற்று கலக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த சூழலில், விசிக மாநாட்டில் தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து விசிக பயணிக்கும் என்ற அறிவிப்பை திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆட்சி அமைந்து 3 மாதங்களுக்கு பிறகு விசிக - தவெக கூட்டணியை திருமாவளவன் முடிவு செய்துள்ளார்.

திருமாவளவனின் இந்த முடிவு விசிக தொண்டர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. இதனால், அமைச்சரவையில் வன்னி அரசும் தொடர்ந்து நீடிப்பார் என்று விசிக தொண்டர்களும் நம்பிக்கையுடன் உள்ளனர்.  திருமாவின் இந்த முடிவும் தவெக-விற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காரணம் என்ன?

அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்த நிலையிலும், தமிழ்நாட்டில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறாது என்ற சூழலிலும், இடைத்தேர்தல் நடந்தாலும் தவெக-விற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசம் என்பதாலும் தவெக தனிப்பெரும்பான்மை பெற்றுவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு இடையூறு ஏற்படுத்திய கட்சிகளின் ஆதரவை தவெக எதிர்பார்க்காது என்ற தகவல்களும் தொடர்ந்து வெளியாகி வந்தது.

மேலும், திமுக - அதிமுக ஆகிய யாருடனும் கூட்டணியில் இருந்தாலும் அமைச்சரவையில் இடம் என்பது சாத்தியமே இல்லாத ஒன்று என்பதாலும், தவெக அரசில் மட்டுமே அது சாத்தியம் என்பதாலும் திருமாவளவனிடம் கட்சியின் நிர்வாகிகள் சிலர் இதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இவை அனைத்தையும் பரிசீலித்த திருமாவளவன் தற்போது தவெக கூட்டணியை தனது தொண்டர்கள் முன்பு அறிவித்துள்ளார். 

தேர்தலுக்கு முன்பே அழைப்பு:

தவெக கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரைக் காட்டிலும் விசிக மீது விஜய் தனி மரியாதை வைத்துள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை. தேர்தலுக்கு முன்பே விஜய் வெளிப்படையாக கூட்டணிக்கு அழைத்தது திருமாவளவனை மட்டுமே ஆகும். அவரை தொடர்ந்து அரசியலுக்கு அழைத்து வந்த சீமானுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்காத விஜய், திருமாவளவனுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். 

அதேசமயம், விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் திருமாவளவனை போட்டியிட வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியது. மேலும், அவர் அவ்வாறு திருச்சி கிழக்கு எம்எல்ஏ ஆனால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கவும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆட்சி அமைந்த பிறகும் திருமாவளவன் முன்னுக்கு பின் முரணாக பேசி வந்த கருத்துக்கள் விஜய்க்கு சற்று வருத்தத்தை உண்டாக்கியது என்றே கூறப்படுகிறது.