புதுச்சேரி: டெல்லி உயர் போலீஸ் அதிகாரி போல் பேசி, செவிலியர் கல்லுாரி பெண் பேராசிரியரிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெண் பேராசிரியரிடம் ரூ. 9.69 லட்சம் மோசடி
பெரியகாலாப்பட்டு, தனியார் செவிலியர் கல்லுாரியில் பணியாற்றி வரும் பெண் பேராசிரியர் ஒருவரை, தொடர்பு கொண்ட மர்ம நபர், டெல்லி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி போல் பேசினார். அதில், பேராசிரியர் பெயரில் சட்டவிரோத பணம் மற்றும் தகவல் பரிமாற்ற மோசடி கண்டறிப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த டெல்லி போலீசார் தொடர்பு கொள்வர் என கூறினார். இதையடுத்து சிறிது நேரத்தில் பேராசிரியரை தொடர்பு கொண்ட மற் றொரு மர்மநபர் டெல்லி போலீஸ் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அதில், பேராசிரியருக்கு மகாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு பண மோசடி குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதால், சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதைநம்பிய பேராசிரியர் 9 லட்சத்து 69 ஆயிரத்து 362 ரூபாயை மர்மநபருக்கு அனுப்பி ஏமாந்தார். இதுகுறித்து பேராசிரியர் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைன் மோசடியில் சிக்கிய 9 பேரிடம் ரூ.7.67 லட்சம் மோசடி
முத்தியால்பேட்டையை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்வது குறித்து விளக்கம் அளித்தார். இதைநம்பி, பல்வேறு தவணைகளாக 3 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். முருங்கப்பாக்கத்தை சேர்ந்த பெண் ஒருவர், ஆன்லைனில் பொருட்கள் ஆர்டர் செய்துள்ளார். இதையடுத்து, அவரது மொபைல் எண்ணிற்கு ஆப் ஒன்று வந்துள்ளது. இதனை பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள் எடுத்தனர்.
இதேபோல், முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, 1 லட்சத்து 40 ஆயிரம், மற்றொரு பெண் 1 லட்சத்து 17 ஆயிரம், முத்தியால் பேட்டையை சேர்ந்த நபர் 94 ஆயிரத்து 220, சுல்தான்பேட்டையை சேர்ந்த பெண் 20 ஆயிரம், உப்பளத்தை சேர்ந்த நபர் 2 ஆயிரத்து 499, பிள்ளைச்சாவடியை சேர்ந்த பெண் 37 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்த பெண் 2 ஆயிரத்து 999 என 9 பேர் சைபர் கிரைம் மோசடி கும்பலிடம் 7 லட்சத்து 67 ஆயிரத்து 718 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.