தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான கட்சியாக பாமக உள்ளது. வட தமிழகத்தில் மிகப்பெரிய வாக்குவங்கியை தங்கள் வசம் வைத்துள்ள பாமக தற்போது தந்தை மகன் சண்டையால் பிளவுபட்டு மோசமான நிலையில் உள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், ராமதாஸ் - அன்புமணி இடையே நடந்து வரும் மோதல் நாளுக்கு நாள் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. 

உச்சத்திற்குச் சென்ற ராமதாஸ் - அன்புமணி சண்டை:

இதனால், பாமக-வின் அடிமட்ட தொண்டர்கள் மிகவும் வேதனையில் உள்ளனர். ராமதாசை எதிர்த்து தற்போது கட்சியை தன் கட்டுப்பாட்டில் அன்புமணி தீவிரமாக பணியாற்றினாலும், அவரால் ராமதாசை வெளிப்படையாக விமர்சிக்க இயலாது. ஏனென்றால், பாமக-வை உருவாக்கி பாமகவை மிகப்பெரிய கட்சியாக உருவாக்கியவர், அவருடைய செல்வாக்கு ஆகியவையே அதற்கான காரணங்கள் ஆகும்.

மகனுக்கு எதிராக மகளை இறக்க முடிவு:

ஆனால், அன்புமணியின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த ராமதாஸ் தாயை அடித்தவர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியதுடன், தன் பெயரை பயன்படுத்த தடை என அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் விடாப்பிடியாக உள்ளார். கட்சியில் அதிகாரம் செலுத்துவது யார்? என்று அதிகார மோதலே இதற்கு காரணமாகி இருக்கும் நிலையில், ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக தனது மகளை களமிறக்க முடிவு செய்துள்ளார். 

தேர்தலில் போட்டியா?

பாமக சார்பில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த செயற்குழு கூட்டத்தில் ஸ்ரீகாந்திமதி பங்கேற்றார். அவரை மேடையில் அமரவைத்தனர். தன் மகன் அன்புமணிக்கு எதிராக கட்சியை வலுவாக வழிநடத்த தன்மகள் ஸ்ரீகாந்திமதியை ராமதாஸ் களமிறக்கி உள்ளார். அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாக உள்ளது. 

தேர்தலுக்கு ஏ மற்றும் பி படிவங்கள் வழங்கும் அனைத்து அதிகாரங்களும் தனக்கே உள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ள நிலையில், ஸ்ரீகாந்திமதியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணியை தீவிரப்படுத்தியுள்ளார். தந்தை மகன் மோதல் என்பது மாறி, தற்போது சகோதரன் - சகோதரி மோதலாக இது மாற இருப்பது பாமகவினர் மத்தியில் மேலும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

குடும்ப அரசியலில் சிக்கிய பாமக:

1989ம் ஆண்டு ஜுலை 16ம் நாள் பாமக-வை ராமதாஸ் தொடங்கியபோது, என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று கூறியிருந்தார். ஆனால், இன்று அவரது கட்சியே குடும்ப அரசியலுக்குள் சிக்கி சிதைந்து கொண்டு இருக்கிறது. 

ராமதாஸ் தனக்குப் பின் பாமக-வின் முகமாக அன்புமணியை கட்சியில் அழைத்து வந்தார். பின்னர், அவருக்கு எம்பி சீட் வாங்கியதுடன் மத்திய அமைச்சர் பதவியும் பெற்றுத்தந்தார். கடந்த 2016ம் ஆண்டு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாமக சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொண்டது. அதன்பின்பு, கூட்டணி முடிவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் இடையே முரண்பட்ட கருத்து வெளியானது. 

சாதகமா? பாதகமா?

பின்னர், கடந்த மக்களவைத் தேர்தலில் அன்புமணியின் மனைவி செளமியா வேட்பாளராக களமிறக்கப்பட்டார். குடும்ப அரசியலை எதிர்த்து குரல் கொடுத்த ராமதாஸ் கட்சியில், அவரது மருமகள் வரை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பெரும் விமர்சனத்தை உண்டாக்கியது. தற்போது, மகனுக்கு எதிராக மகளை களமிறக்க உள்ள ராமதாசின் முடிவு பாமக-விற்கு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

அன்புமணியின் மகள் சம்யுக்தாவை ஸ்ரீகாந்திமதியின் மகன் ப்ரீத்திவன்தான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்ரீகாந்திமதியின் மற்றொரு மகன்தான் முகுந்தன்.