பொங்கல் பண்டிகையையொட்டி புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களுக்கும், உலகமெங்கும் பரவி இருக்கும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது பொங்கல் விழா. இயற்கையையும், உழவுத் தொழிலையும் போற்றும் பொங்கல் விழா, தமிழரின் மாண்பையும், கலைகளையும் பெருமைப்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மண்ணால் செய்யப்பட்ட பானை, அடுப்பு வாங்கி மண்பாண்டத் தொழிலை ஆதரிப்போம். 2023-ம் ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்திருப்பது இந்திய வேளாண்மையையும் பாரம்பரிய உணவுதானிய உற்பத்தியையும் மேம்படுத்தும் என்ற செய்தியோடு, இந்த பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் அன்பும், மகிழ்ச்சியும், இன்பமும், இனிமையும், நலமும், வளமும் பெருக வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் என ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.


முதல்வர் ரங்கசாமி வாழ்த்து :


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-


உலகிற்கு உணவளிக்கும் உயிர் தொழிலான உழவு தொழிலுக்கு உதவும் சூரியன் மற்றும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகையின் பெருமையை நாமும் உணர்ந்து மற்றவர்களுக்கும் எடுத்து சொல்லி அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கவேண்டும். இந்த இனிய திருநாளில் அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உள்ளங்களில் உற்சாகம் பரவட்டும். வளமும் நலமும் வாழ்வில் சேரட்டும். காணும் பொங்கல் அன்று உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுடன் பரிமாறிக்கொள்ளும் வாழ்த்தும், மகிழ்ச்சியும் தொடரட்டும். மேலும் திருவள்ளுவர் தினத்தையொட்டி வான்புகழ் வள்ளுவனின் குறள் நெறிகளை நெஞ்சில் ஏந்துவோம் என்று கூறி அனைவருக்கும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


அமைச்சர் லட்சுமிநாராயணன்


பொங்கல் பண்டிகை தமிழரின் தொன்றுதொட்ட பாரம்பரியத்தையும், பெருமையையும் பறைசாற்றும் நாள். இப்பொங்கல் நன்னாளில் மகிழ்ச்சி, அமைதி, ஆரோக்கியம், செல்வம், செழிப்பு அனைத்தும் மக்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இத்திருநாளில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் நன்னாளில் மக்களை மகிழ்விக்க புதுச்சேரியில் கலைநிகழ்ச்சிகளும், காரைக்காலில் கார்னிவல் என்னும் பெரிய கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் ரூ.3.30 கோடிக்கு வணிக திருவிழா மூலம் மக்களுக்கு எண்ணற்ற பரிசுகளும் காத்திருக்கிறது' என்று கூறியுள்ளார்.


அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்:-


விவசாயிகள் வியர்வையை மண்ணுக்கு உரமாக்கி, வெயில், மழை பாராமல் பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை, தானியங்களை, வேளாண் விளைபொருட்களை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க செய்யும் வேளாண் தொழிலுக்கும், விவசாயிகளுக்கும் நன்றி பாராட்டவும் விவசாய பெருமக்கள் கால்நடை வளர்ப்போர் போன்ற பல்வகை உணவு உற்பத்தியாளர்கள் தங்கள் தொழிலுக்கு உதவிட்ட சூரிய பகவானுக்கு படையலிட்டு போற்றி வணங்கிடவும் செய்யும் பொங்கல் திருவிழா சிறப்படைய வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


அமைச்சர் சாய்.சரவணன்குமார்:-


அறுவடை திருநாளாம் பொங்கல் நன்னாளில் தமிழர்கள் வாழ்வில் அன்பும், அமைதியும் நிலவட்டும். நலமும், வளமும் பெருகட்டும் என மனதார வாழ்த்தி பொங்கல் திருநாளை இனிதே கொண்டாடி மகிழும் புதுவை மக்கள் அனைவருக்கும் மீண்டும் எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கி கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி தலைவர், எம் எல் ஏ சிவா :-


எல்லோருக்கும் எல்லாம் என்ற நிலையை அடைய இந்த இனிய தமிழர் திருநாளில் உறுதி கொண்டு பொங்கலிடுவோம். தமிழ், தமிழ் இனத்தின் பெருமையை கலாச்சாரத்தை பண்பாட்டை உலகுக்கு உணர்த்தி உவகையுடன் பொங்கல் வைப்போம். இத் தை முதல் நாளில் நாம் அனைவரும்  எங்கே தமிழர் நலம் கெடுகிறதோ அங்கெல்லாம் கிளர்ந்தெழுந்து, புரட்சி செய்து தமிழர் தம் பெருமையை உணர்த்தி, உயர்த்திக் காப்போம். பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார், பேரறிஞர் பெருந்தகை அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் மறுவடிவாகத்திகழும் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் வழி நடப்போம். இனி வரும் காலம் எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காலம் என உழைத்திடுவோம். திராவிட மாடல் ‘திக்கெட்டும் பரவட்டும்’. சமச்சீரான வாய்ப்பு, சமத்துவம், சமூக நீதி மலர்ந்திட பொங்கல் பொங்கட்டும். புதிய வரலாறு படைப்போம். இயற்கை, கால்நடைகள் மற்றும் உழைப்பைப் போற்றும் பண்பு கொண்ட பொங்கலின் பெருமையை உலகமே வியக்கும் வண்ணம் உணர்த்தி மகிழ்வோடு பொங்கல் திருநாளை வரவேற்போம். உழவர் பெருமக்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் அனைவருக்கும் இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள். புதுச்சேரியிலும் ‘திராவிட மாடல்’ நல்லாட்சி மலர பொங்கட்டும் புதுமைப் பொங்கல் வாழ்த்துக்கள். 


புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்:-


 உலக மக்கள் அனைவருக்கும் அவர்களின் ஜீவாதார பசியை போக்கும் விவசாய பெருமக்களுக்கு சிறப்பு செய்யும் நாள் பொங்கல் திருநாளாகும்.இந்த பொங்கல் திருநாளில் ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதி, சந்தோஷம், மன நிம்மதி,சிறப்புகள் அமைய கழகத்தின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.


பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன்:-


நம்மிடம் தேங்கிக்கிடக்கும் வாழ்வியல் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி நல்லது இனி நடக்கும் என்ற நம்பிக்கை தரும் விழா போகிப்பண்டிகை. பழயைன கழிதலும், புதியன புகுதலும் என்ற நம்பிக்கைக்கு இணங்க மக்களின் இன்னல்கள் அழிந்து சுகவாழ்வு வாழ இறைவனை வணங்குவோம். மதங்களை கடந்து மனிதநேயம் போதிக்கும் மகத்தான பண்டிகை இந்த 3 நாள் பொங்கல் விழா. இவை அனைத்தும் புதுவை மக்களுக்கு சிறப்பாக அமைந்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.