புதுச்சேரி: புதுச்சேரி பிஆர்டிசியை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சருக்கு எதிராக நேரு எம்எல்ஏ தலைமையில் பொதுநல அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறை சார்பில் பேருந்து பணிமனை, மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையம் திறப்பு விழா, மின் பஸ்கள், மின் ரிக்ஷா இயக்கம், ஆட்டோ சவாரி செயலி தொடக்கவிழா இன்று மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரில் நடந்தது. இங்கு மின் பஸ்களை சார்ஜ் செய்யவும், பராமரிக்கவும் தேவையான உள்கட்டமைப்புகளை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன்மூலம் லாபத்தில் இயங்கிய அரசு போக்குவரத்து கழகத்தை ஒழித்துவிட்டு, முழுமையாக தனியார்மயமாக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என சுயேச்சை எம்எல்ஏ நேரு தலைமையிலான பொது நல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். விழா நடைபெறும்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.
இதற்காக இன்று காலை மறைமலை அடிகள்சாலை, கண் டாக்டர் தோட்டம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் நின்று கொண்டிருந்தனர். விழாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்பி மற்றும் அதிகாரிகள் வந்தனர். அவர்கள் கவர்னரை வரவேற்க மறைமலை அடிகள் சாலை, தாவரவியல் பூங்கா எதிரே காத்திருந்தனர்.
அப்போது துணைநிலை ஆளுநரின் கார் வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்தை சுற்றி வந்தது. அப்போது ஆங்காங்கே நின்றிருந்த பொது நல அமைப்புகள் நேரு எம்எல்ஏ தலைமையில் கருப்பு கொடிகளுடன் விழா நடைபெற்ற பணிமனை முன்பு திடீரென குவிந்தனர்.
அவர்கள் கருப்புக்கொடியை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி முன்பு காட்டினர். இதனால் அங்கு திடீர் பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் கவர்னர், முதல்அமைச்சரை பாதுகாப்பாக உள்ளே அழைத்து சென்றனர். நுழைவுவாயில் கதவை அடைத்து போராட்டக்காரர்கள் உள்ளே நுழைவதை தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதில் நேரு எம்எல்ஏ மகன் ரஞ்சித்குமார் சட்டை கிழிந்தது. உதவியாளர் செங்குட்டுவன் கீழே விழுந்ததால் காயமடைந்தார்.
இதையடுத்து போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனிடையே நேரு எம்எல்ஏ விழா அரங்கில் நுழைந்து, மேடை ஏறி முதல் அமைச்சரிடம், தனியார்மயத்தை எப்படி ஆதரிக்கலாம்? ஒரு கிமீக்கு ரூ.30 தருவதற்கு பதிலாக ரூ.65 வழங்குவது ஏன்? என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
பின்னர் அவர் விழாவை புறக்கணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார். நேரு எம்எல்ஏ தலைமையில் மறைமலை அடிகள் சாலையில் சமூகநல அமைப்பினர் ஊர்வலமாக சென்றனர். வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகே கோரிக்கையை வலியுறுத்தி கருப்புக்கொடியுடன் கோஷம் எழுப்பினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இந்த சம்பவத்தால் அரசு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.