புதுச்சேரி: பேனர்களால் விபத்துகள் ஏற்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரண்டு உயிரிழப்பிற்கு முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.


புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:


புதுச்சேரியில் 2½ ஆண்டாக முதல்வர் ரங்கசாமி ஆட்சிக்கு வந்த பின் பேனர் கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பிறந்தநாள் விழாக்களில் புதுச்சேரியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசின் அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படுகிறது. புதுச்சேரியில் பேனர் தடை சட்டம் அமலில் உள்ளது. இதை அமல்படுத்த வேண்டிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.


நீதிமன்றத்தில் ஏற்கனவே பேனர் தடை சட்டத்தை அமல்படுத்த தீர்ப்புள்ளது. மீறி பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவு புதுச்சேரியில் காற்றில் பறக்கிறது. முதலமைச்சரே பேனர் தடை சட்டத்தை மதிப்பதில்லை. காவல்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவுக்காக புதுவை முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. சமூக ஆர்வலர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் போராட்டம் நடத்தியும் எடுக்கவில்லை. பேனர்களால் ஏற்பட்ட விபத்துகளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த 2 உயிர் பலிக்கு முதல்வர், அமைச்சர் நமச்சிவாயம் பொறுப்பேற்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்று முதல்வர், அமைச்சர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும்.


நைனார்மண்டபத்தில் பேனரை கிழித்தார்கள் என 2 சிறுவர்கள் மீது முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். பேனரை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. அமைச்சர் பிறந்தநாள் விழா முடிந்தவுடன் கலெக்டர் பேனர்களை அகற்ற அறிவிப்பு வெளியிடுகிறார். ஆட்சியர் என்ன ஜப்பானில் இருந்தாரா? அவர் புதுச்சேரியில் பேனர்களை பார்க்க வில்லையா? எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் பேனர் வைப்பது தவறு. பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட, அனுமதியளித்த இடங்களை தவிர மற்ற இடங்களில் யார் பேனர் வைத்தாலும் அகற்றப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியர், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.


சட்டத்தை மதிக்கும் ஆட்சியாக இருந்தால் பதவியிலிருந்து வெளியேற வேண்டும். புதுச்சேரி மக்கள் குமுறி வருகின்றனர். புதுச்சேரியில் தற்போதுள்ள அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த எந்த முக்கியத்துவமும் அளிப்பதில்லை. எதிர்க்கட்சிகள் கேள்விகேட்டால் பதில் சொல்வதில்லை. சுய விளம்பரம் செய்வதில் தான் ஆட்சியாளர்கள் விருப்பமாக உள்ளனர். துன்புறுத்தாமல் இருந்தால் போதும் என்ற மனநிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். புதுவையில் கஞ்சா நடமாட்டம் அதிகரித்துள்ளது. போக்குவரத்தை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. போக்குவரத்து போலீசார் எந்த சிக்னலிலும் சீரமைப்பு பணியில் ஈடுபடவில்லை. போலீசார் கட்ட பஞ்சாயத்து செய்யும் வேலையில் உள்ளனர். காவல்துறையில் எந்த புகாரையும் பதிவு செய்வதில்லை. புதுச்சேரி மாநில காவல்துறை தரம்கெட்டுள்ளது என முன்னால் முதல்வர் கடுமையாக குற்றம்சாற்றியுள்ளார்.