பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்
புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுஇடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, தொற்று நோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள, பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும். இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை இயக்குனரகம் புதுச்சேரி அரசு நலவழித்துறை செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களாக வட சீனாவில் உள்ள குழந்தைகளிடையே சுவாச நோய் பாதிப்புகள் குறித்து பல ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்களில் செய்திகள் வெளியிட்டு வருகின்றன . உலக சுகாதார மையம் (WHO) இந்த விவகாரம் குறித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் மத்திய சுகாதார அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள சுவாச நோயின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, சுகாதார இயக்குநரகம், புதுச்சேரி பிராந்தியத்தில் சுவாச நோய்களின் அதிகரிப்புக்கு ஏற்ப தயார்நிலையில் மருத்துவ வசதிகளை செய்துள்ளது.
பருவகால காய்ச்சலின் பாதிப்பு
தற்போதைய நிலைமை மற்றும் கிடைக்கக்கூடிய தரவுகளின் அடிப்படையில், புதுச்சேரியில் பருவகால காய்ச்சலின் பாதிப்பு குறைவாக இருந்தாலும், சுவாச நோய்களில் அசாதாரண அதிகரிப்பு இல்லை. பருவகால காய்ச்சல் என்பது பெரும்பாலும் காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இல்லாமலேயே லேசான சுவாச நோயாகும். நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளால் பாதிக்கப்பட்டால், அருகில் உள்ள சுகாதார நிலையத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தங்களை தனிமை படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். மேலும் மக்கள் நெரிசலான இடங்களில் தும்மல் மற்றும் இருமல் பழக்கம் இருப்பதனால் அனைவரும் முக கவசம் அணியும் வழக்கங்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். நெரிசலான இடங்களைத் தவிர்ப்பதன் மூலம் காய்ச்சலைத் தடுக்கலாம். முறையான கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் ஆகியவை தொற்றுநோயைத் தடுக்க உதவும். மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இதுபோன்ற அறிகுறிகளோடு வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளை இயக்குனரகம் செய்துள்ளது.
புதுச்சேரி பிராந்தியம் தயாராக உள்ளது
அரசு பொது மருத்துவமனை, கோரிமேடு சுவாச மருத்துவமனை மற்றும் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளில் இதுபோன்ற நோயாளிகளை அனுமதிக்கவும் சிகிச்சை அளிக்கவும் போதுமான படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது, பருவகால சுவாச நோய்த்தொற்றுகளைக் கையாள புதுச்சேரி பிராந்தியம் போதுமான அளவு தயாராக உள்ளது.
விழுப்புரம் அருகே இருளர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விஏஓ கைது