எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில், இன்று சென்னையில் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினார். 

அப்போது செய்தியாளர்களை சந்திந்த அவர், “ எம்ஜிஆர் மிகவும் மரியாதையுடன் பார்க்ககூடிய தலைவர். கட்சி எல்லை கடந்து அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு சத்துணவு திட்டத்தை விரிவு படுத்தியவர். சத்துமாவு உருண்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்தவர். கல்வி பயின்ற குழந்தைகளுக்கு கல்வியுடன் சத்துணவையும் கொடுத்தவர். மிகச் சிறந்த ஆட்சியாளராக இருந்தவர். எங்களது திருமணத்தை நடத்தி வைத்தவர். அந்த ஒரு நன்றி உணர்வோடு இன்றைக்கு எம்ஜிஆர் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன். அதற்காவே இங்கு வந்தேன்.” என்று தெரிவித்தார். 

அப்போது செய்தியாளர்கள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம், எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக இப்போது துண்டு துண்டாக உடைந்து விட்டது. ஒரு ஆளுநராக என்ன சொல்ல வரீங்க என்று கேள்வி எழுப்பினார்கள். 

அதுக்கு சிரித்துகொண்டே பதிலளித்த ஆளுநர் தமிழிசை, ”இது ரொம்ப சரியான கேள்வி! கட்சி துண்டு துண்டாக இருக்கு. ஆளுநரா என்ன சொல்ல வரீங்கனா.. கட்சி தலைவராக இருந்தால்தான் இதற்கு பதிலளிக்க முடியும். ஆளுநரா பதில் சொல்ல முடியாது. அதனால் இதில் நான் அரசியல் கருத்து சொல்ல கூடாது. ஆனால் என்னை பொறுத்தவரை, எம்ஜிஆர் அவர்கள் ஒரு நல்ல கனவோடு அதிமுக கட்சியை தொடங்கி நடத்தி வந்தார்கள். இதனால் இப்போது அதிமுகவில் இருப்பவர்கள் ஒற்றுமையுடன் இருந்து கட்சியை வழிநடத்தினால் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து. ” என தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எம்ஜிஆர் அவர்கள் தேசிய தலைவரா? திராவிட தலைவரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ஒரே வரியில் பதிலளித்த புதுச்சேரி ஆளுநர் தமிழிசை, “எம்.ஜி.ஆர். தேசியம் போற்றிய திராவிடத் தலைவர்” என தெரிவித்தார்.