புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்களில் உள்ள குறைகளைத் தீர்க்கவும், மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தாமதத்தை விரைந்து சரிசெய்யவும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இயக்குநரை நேரடியாகச் சந்தித்துப் பேசலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக கால அட்டவணையை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

கல்வி உதவித்தொகை புகார்களுக்கு முன்னுரிமை

புதுச்சேரி அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாணவர்களுக்குக் கல்விக்கட்டணம் (Tuition Fees) மற்றும் கல்வி உதவித்தொகை (Scholarship) வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இத்திட்டங்களில் சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்களால் நிதி வழங்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

இந்தத் தாமதங்கள் குறித்து மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் பெறவும் ஏதுவாக ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கல்வி தொடர்பான குறைகளுக்கு

செவ்வாய் மற்றும் வியாழன் கிழமைகளில் காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியவும், நிலுவையில் உள்ள உதவித்தொகை தொடர்பாக நேரடியாக இயக்குநரைச் சந்தித்து முறையிடலாம்.

இதர நலத்திட்டங்களுக்கான சந்திப்பு நேரம்

கல்வி உதவித்தொகை தவிர்த்து, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் முதியோர் ஓய்வூதியம், வீட்டு வசதித் திட்டங்கள், திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்கள் சார்ந்த குறைகளைத் தெரிவிக்க விரும்புவோருக்குத் தனி நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை ஆகிய நாட்களில் காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை பொதுமக்கள் இயக்குநரைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

"பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ள இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இயக்குநர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

துறைப் பிரிவுகளை நேரடியாக அணுக வேண்டாம்

இந்த புதிய அறிவிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், பொதுமக்கள் தங்கள் குறைகளுக்காகத் துறையின் வெவ்வேறு பிரிவுகளுக்குச் சென்று அலைக்கழிக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதாகும். விசாரணைகளுக்காகவோ அல்லது புகார்களுக்காகவோ பொதுமக்கள் நேரடியாகத் துறைப் பிரிவுகளை (Departmental Sections) அணுகுவதைத் தவிர்க்குமாறு இந்தச் செய்திக்குறிப்பு மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிர்வாக நடைமுறைகளை எளிதாக்கவும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தட்டான்சாவடியில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்திற்குச் சென்று, குறிப்பிட்ட நேரங்களில் இயக்குநரைச் சந்தித்துத் தீர்வு காணலாம்.

*இடம்: ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம், காமராஜ் சாலை, தட்டான்சாவடி, புதுச்சேரி-9.

* கல்வி உதவித்தொகை புகார்கள்: செவ்வாய் & வியாழன் (11 AM - 1 PM).

* இதர திட்டப் புகார்கள்: திங்கள் & புதன் (11 AM - 1 PM).

புதுச்சேரி அரசின் இந்த முன்னெடுப்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் மற்றும் மாணவர்களின் குறைகளை விரைவாகத் தீர்க்க வழிவகுக்கும் என்றும் இந்த நடைமுறை வரவேற்கத்தக்கது என சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.