ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல்

புதுச்சேரியில் போலி மருந்துகள் தயாரிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. இதையடுத்து, மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு மற்றும் புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டு துறை இணைந்து, புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது, மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பின் அதிகாரிகளான மருந்துகள் ஆய்வாளர்கள் சக்திவேல், தேவகிரி, புஷ்பராஜ், புதுச்சேரி மருந்துகள் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வாளர்கள் இந்துமதி, ஜெனிபர் அன்பரசி ஆகியோர் போலீஸார் பாதுகாப்புடன் ஆய்வு பணி மேற்கொண்டனர்.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்தபோது, மேட்டுப்பாளையம் தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்ற சோதனையில், உரிமம் இல்லாமல் ரூ.99 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மாத்திரைகள், புதுவை பிச்சைவீரன் பேட்டை சேர்ந்த நேச்சுரல் கேப்ஸுல் பிரைவேட் லிமிடெட், நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது.

பிரைமரி பேக்கிங் மாத்திரைகள்

சென்னையை சேர்ந்த நெபுலே பார்மசியூட்டிகல்ஸ் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பேபுலஸ் லைப் சயின்சஸ் மூலம் தயாரிக்கப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டிருந்த பிரைமரி பேக்கிங் மாத்திரைகள், அலுமினிய பாயில்கள் மற்றும் அட்டை பெட்டிகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

உரிமம் இல்லாமல் தயாரித்த ரூ.1 கோடி மதிப்புள்ள போலி மருந்துகளை மத்திய மருந்துகள் தர ஆய்வு அமைப்பு பறிமுதல் செய்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரைமரி பேக்கிங் என்பது மாத்திரைகளுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஒரு மருத்துவப் பேக்கேஜிங் ஆகும், இது கொப்புளம் பேக்குகள் (பிளாஸ்டிக் மற்றும் அலுமினியத்தால் ஆனவை) அல்லது தனிப்பட்ட மாத்திரைகள் மற்றும் காப்ஸ்யூல்களின் படலப் பொதிகளை உள்ளடக்கியது. இது மருந்தை ஈரப்பதம், ஒளி மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகளிலிருந்து பாதுகாக்கிறது.