கிரகணங்கள் ஏற்படுவது வானில் நிகழும் ஒரு அரிய வானியல் நிகழ்வு. இந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 7 - 8 ஆகிய நாட்களில் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் நிகழ உள்ளது. இந்த அரிய வானியல் நிகழ்வை காண உடுமலையில் கலிலியோ அறிவியல் கழகம் மூலம் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை சந்திர கிரகணம் தோன்றுகிறது.

 சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரிய ஒளி நிலவில் படாது. அந்த நிகழ்வே சந்திர கிரகணம் ஆகும். சூரியனின் கதிர்கள் பூமியில் விழும்போது, அதன் நிழல் நிலவின் மீது விண்வெளியில் விழுகிறது. சந்திரன் நிழலின் திட்டுக்குள் நுழையும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

மூன்று வகையான சந்திர கிரகணங்கள் உள்ளன. 1. முழு சந்திர கிரகணம் 2. பகுதி சந்திர கிரகணம் 3. புற நிழல் சந்திர கிரகணம்.

ரத்த நிலவு என்பது என்ன?

ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் அல்லது ஒரு நீளமான வட்டத்தில் பூமியைச் சுற்றிச் செல்லும்போது, சந்திரன் பெரிஜீ (பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி) மற்றும் அபோஜீ (பூமியிலிருந்து வெகு தொலைவில் உள்ள புள்ளி) வழியாக செல்கிறது. சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது அல்லது அதற்கு அருகில் இருக்கும்போது, அதுவும் முழு நிலவாக இருப்பதாலும், அது “சூப்பர்மூன்”என்று அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, முழு நிலவு வழக்கத்தை விட நமக்கு சற்று நெருக்கமாக இருப்பதால், அது குறிப்பாக பெரியதாகவும் வானத்தில் பிரகாசமாகவும் தோன்றுகிறது.

சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டுச் சிதறுவதால் சிவப்பு நிற அலைவரிசை, நிலவின் மேற்பரப்பில் பட்டுப்பிரதிபலிக்கும். அதனால் ஆரஞ்சு நிறத்திலிருந்து ரத்தச் சிவப்பு வரையிலான நிறங்களில் நிலா தெரியும். இதனால் ரத்த நிலா என அழைக்கப்படுகிறது.

ஆகவே சந்திர கிரகணத்திற்கு பின்னர் நிலவு ரத்த சிவப்பு நிறத்தில் இருக்கும்.வழக்கத்தை விட மிகவும் பிரகாசமாக ஜொலிக்கும். இதனை ஆங்கிலத்தில் Blood Moon என்று அழைக்கின்றனர். இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.

 *எங்கெல்லாம் முழு சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்?

ஆசியாவில் சில நாடுகள், குறிப்பாக இந்தியாவில் வட இந்தியா, தென் இந்தியாவில் சென்னை , கோவை, திருச்சி பெங்களூர் உட்பட பல பகுதிகளில்  முழு சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

இந்த முழு சந்திர கிரகணம், இந்திய நேரப்படி செப்.7 இரவு 9.58  க்கு ஆரம்பித்து  செப்.8 அதிகாலை 1.26 க்கு  முடிவடைகிறது. இது சுமார் 3மணி நேரம் 28 நிமிடங்கள் நீடிக்கிறது.இது மிக நீண்ட சந்திர கிரகணமாக அமையும் என்று கருதப்படுகிறது.

எப்படி காணலாம்?

இந்த சந்திர கிரகணத்தை தொலைநோக்கி, பைனாகுலர் அல்லது வெறும் கண்ணால் கூட நாம் பார்க்கலாம். வானம் தெளிவாக இருந்தால் பார்வையாளர்கள் வெறும் கண்களாலேயே பார்த்து ரசிக்கலாம்.

இதுபோன்ற இரவில் ஏற்படுகின்ற அரிய வானியல் நிகழ்வுகளை உற்று நோக்குவதன் மூலமாக பல வானியல் கருத்துக்களை குழந்தைகள் தெரிந்து கொள்ளமுடியும்.

இந்த அரிய நிகழ்வினை கண்டுகளிக்க மறந்து விடாதீர்கள். அடுத்த சந்திர கிரகணம் டிசம்பர் 2028-ல்தான்  நிகழும் என்று உடுமலை கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்துள்ளார்.