விழுப்புரம் : புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகத்திற்கு சிபிசிஐடி போலீசார் நேற்று இரவு சீல் வைத்தனர்.

Continues below advertisement

போலி மருந்து குடோன்

புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருந்துகளின் தலைமையகத்திற்கு சிபிசிஐடி (CBCID) போலீசார் நேற்று இரவு அதிரடியாக சீல் வைத்தனர். எனினும், இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான ராஜா (எ) வள்ளியப்பனுக்கு புதுச்சேரி நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியிருப்பது புதுச்சேரி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 63 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சிபிசிஐடி விசாரணை

பிரபல மருந்து நிறுவனமான சன் பார்மா, தங்கள் நிறுவன தயாரிப்பு மருந்துகள் புதுச்சேரியில் போலியாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக சிபிசிஐடி போலீசில் புகார் அளித்தது. இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மதுரையைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் (40) என்பவர், பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகளைத் தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

Continues below advertisement

இதையடுத்து, போலி மருந்து தயாரித்தது தொடர்பாக சீர்காழியைச் சேர்ந்த ராணா, காரைக்குடியைச் சேர்ந்த மெய்யப்பன் ஆகிய இருவரைக் போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான ராஜா மற்றும் விவேக் உள்ளிட்டோரைத் தேடி வந்தனர்.

குடோன்களுக்கு அதிரடி சீல்

கைதான இருவரும் அளித்த தகவலின் அடிப்படையில், ராஜா போலி மருந்துகள் தயாரித்த குருமாம்பேட், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மூன்று குடோன்கள் மற்றும் திருபுவனைபாளையத்தில் 'லார்வன்' என்ற பெயரில் மூடப்பட்டிருந்த ஒரு கம்பெனியையும் உடைத்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தக் கிடங்குகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் அனுமதி பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 4 நாட்களாக புதுச்சேரி நகரின் மையப் பகுதியான செட்டித் தெருவில் இயங்கி வந்த போலி மருந்தகத்தின் தலைமையகமான "ஃபார்ம் ஹவுஸ்" மற்றும் "ஸ்ரீ சன் பார்மா" அலுவலகம் மற்றும் குடோன்களில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் உதவியுடன் அதிரடிச் சோதனை நடத்தினர். அதே நேரத்தில் இடையார்பாளையம், தவளக்குப்பம், பூர்ணாங்குப்பம் ஆகிய இடங்களில் உள்ள குடோன்களிலும் கடந்த மூன்று நாட்களாக சோதனை மேற்கொள்ளப்பட்டது.

1000 வகை மருந்துகள்; 38 விநியோகஸ்தர்கள்

இந்தச் சோதனையில், 40 நிறுவனங்களின் ஆயிரம் வகை மருந்துகளை 1:4 என்ற விகிதத்தில் போலியாகத் தயாரித்து 38 விநியோகஸ்தர்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

நீதிமன்றத்தின் அனுமதி பெற்று நேற்று மாலை போலி மருந்துகளின் தலைமையகமான 'ஃபார்ம் ஹவுஸ்', 'ஸ்ரீ சன் பார்மா' ஆகிய நிறுவனங்களில் இருந்த 30 கம்ப்யூட்டர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அங்கு பணியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, 1,000 வகை மருந்துகளை குடோனில் வைத்து, தலைமையக அலுவலகத்திற்கு நேற்று இரவு 'சீல்' வைத்தனர். இதேபோல் பூர்ணாங்குப்பம் மற்றும் இடையார்பாளையத்தில் இருந்த குடோன்களுக்கும் பூட்டுப் போட்டு 'சீல்' வைக்கப்பட்டது.

போலி மருந்து தயாரித்து மூன்று மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்த முக்கிய நபரான தலைமறைவாக உள்ள ராஜா (எ) வள்ளியப்பன், விவேக் ஆகியோர் முன்ஜாமின் கோரியும், சிறையில் உள்ள ராணா ஜாமின் கோரியும் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான ராஜா மற்றும் விவேக்கிற்கு முன்ஜாமினும், ராணாவிற்கு ஜாமினும் அளித்து இரு தினங்களுக்கு முன் உத்தரவிட்டார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்து வழக்கில், முக்கியக் குற்றவாளிக்கு முன்ஜாமின் அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, புதுச்சேரி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 63 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.