" இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு காதல் வலை " வீட்டிற்கு வரவழைத்து பாலியல் அத்துமீறல்
சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ( வயது 27 ) சவுண்டு இன்ஜினியர். இவர் சமூக வலைதளபக்கமான இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகிய 8 - ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதை, பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். பின் அங்கு வந்த பெற்றோர் போலீசார் உதவியுடன் சிறுமியை மீட்டனர்.
இது குறித்து விசாரித்த விருகம்பாக்கம் மகளிர் போலீசார் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் சுப்பிரமணியை கைது செய்தனர்.
காதலிக்க மறுத்ததால் காரில் கடத்தப்பட்ட இளம்பெண் !! விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் போலீசார் மீட்பு
சென்னை திருமங்கலம் காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும், 48 வயது நபர் ஒருவர் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு வரும் வழியில் தன் மகள் கடத்தப்பட்டு விட்டதாகவும் தன் வீட்டின் அருகே வசித்து வந்த ஷியாம் சுந்தர் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும், நொளம்பூர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்படி நொளம்பூர் இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தலைமையிலான தனிப்படை போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் இளம்பெண் கடத்தப்பட்ட காரின் எண்ணை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர். அதன்படி, வடக்கு மண்டலத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். திண்டிவனம் அருகே விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் இளம்பெண்ணை கடத்திய காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரில் இருந்த ஷியாம் சுந்தரை போலீசார் கைது செய்து, இளம் பெண்ணை மீட்டு சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.
அதில், ஷியாம் சுந்தரும் இளம்பெண்ணும் காதலித்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின் ஷியாம் சுந்தருடன் இளம்பெண் பேச மறுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஷியாம் சுந்தர் அப்பெண்ணை கடத்தியதும் தெரிந்தது. நொளம்பூர் போலீசார் ஷியாம் சுந்தரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடத்தலுக்கு காரை கொடுத்து உதவி புரிந்த நபர் மற்றும் பெண் என இருவரை தேடி வருகின்றனர்.