புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களை நிரப்புவதில் குளறுபடிகள் நடப்பதாகவும், ஏற்கனவே பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை அரசு வஞ்சிப்பதாகவும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

Continues below advertisement

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கு புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதில் ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 600-க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பிளஸ் டூ கல்வி தகுதியாக நிர்ணயம் செய்து தேர்வு நடைபெற உள்ளது.

Continues below advertisement

ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டில் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு மூலம் சுமார் 170-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 6000 ரூபாய் மற்றும் உதவியாளர்களுக்கு 4000 ரூபாய் ஒப்பந்த சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு ஏற்கனவே அங்கன்வாடி மையங்களில் ஒப்பந்த ஊழியர்களாக கடந்த ஐந்தாண்டுகளாக பணிபுரிவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தொடர்ந்து அந்த ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் ஆளும் அரசனது அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னுரவில்லை.

இந்நிலையில் ஏற்கனவே ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் பல அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை காலிப் பணியிடங்களாக அரசு கருத்தில் கொண்டு அந்த இடங்களிலும் புதிய பணியாளர்களை தேர்வு செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது என்பது நியாயமற்ற செயலாகும்.

 ஏற்கனவே ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரியும் இடங்களில் அந்த ஒப்பந்த ஊழியர்களை கொண்டு அந்த இடத்தை பூர்த்தி செய்வது சரியான நடவடிக்கையாகும். ஆனால் அதைவிடுத்து அந்த இடங்களிலும் காலி பணியிடங்களாக அரசு கருத்தில் கொண்டு அந்த அங்கன்வாடி மையங்களுக்கும் புதிய ஊழியர்களை தேர்வு செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

எனவே முதலமைச்சர் அவர்கள் இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை தற்போது வேலை செய்யும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில் பணியில் அமர்த்த வேண்டும். அவர்கள் பணி செய்யும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிதாக பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும். காலியாக உள்ள அங்கன்வாடி பணியிட மையங்களில் புதிய பணியாளர்களை நியமனம் செய்வதில் ஏற்கனவே உள்ள கலநிலவரத்தை சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் கருத்தில் கொள்ளாமல் இருப்பது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். 

அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான அதிகார செயலில் இது போன்ற தவறான செயலை செய்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு துணை போகக்கூடாது. எனவே முதலமைச்சர் அவர்கள் தற்போது ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களை அழைத்து அவர்களது நியாயமான இந்த பிரச்சனையில் ஒரு சரியான முடிவினை எடுக்க வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு கடந்த 10 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை இருப்பினும் அவர்கள் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் நிலையை உணர்ந்து பணியில் தொடர்ந்து பணி செய்கிறார்கள் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.