புதுச்சேரி: புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
புதுச்சேரி அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா
புதுச்சேரியில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வெற்றி பெற்று, ரங்கசாமி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் சாய் ஜெ சரவணன் குமார். இவர் ஊசுடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். பாஜக எம்எல்ஏவான இவருக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இந்த சூழலில், புதுச்சேரியில் பாஜக நியமன எம்எல்ஏக்களான ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் சபாநாயகர் செல்வத்துடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினர்.
இவர்கள் மூன்று பேரும் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. புதிய நியமன உறுப்பினர்களாக ஜி.என்.எஸ்.ராஜசேகர், தீப்பாய்ந்தான், முதலியார்பேட்டை செல்வம் ஆகியோர் நியமனம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராக இருந்த சாய் சரவண குமார் (பாஜக) இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் ரங்கசாமி இடம் வழங்கினார். மேலும், காலியாக உள்ள அமைச்சர் பதிவியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.