புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


புதுச்சேரியில் டாடா ஏஸ் டிரைவரரக  வேலை செய்து வருபவரின் 9 வயது மகள், அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி மதியம் 1 மணியளவில் வீட்டின் அருகில் விளையாடியபோது திடீரென மாயமானார். இதுகுறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். முத்தியால்பேட்டை போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.


இந்த நிலையில், சிறுமி முத்தியால்பேட்டை எல்லையை தாண்டி செல்லவில்லை என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனால் சிறுமி நடந்து சென்ற பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்குகள், குடிநீர் தொட்டிகளில் தவறி விழுந்து இருக்கலாமா என போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் அப்பகுதியில் உள்ள செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.


இதனைத்தொடர்ந்து மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாயமான குழந்தையை தேடும் பணி நடைபெற்று  வந்த நிலையில் கூடுதலாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. மேலும் பொதுப்பணித்துறை ஊழியர்களை கொண்டு அப்பகுதியில் உள்ள பெரிய வாய்கால்களிலும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.


அப்போது சிறுமி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள வாய்காலில் இறந்த நிலையில் சடலமாக கிடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிறுமி உடலை சாக்கு பையில் போட்டு, கழிவுநீர் கால்வாயில் வீசி இருந்தனர். கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.


பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் கைது


போலீசார் நடத்திய விசாரணையில், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ்,19, விவேகானந்தன்,56, ஆகியோர், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரிய வந்தது.  இதையடுத்து, இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து கைது செய்த போலீசார், அவர்களை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


கழிவறையில் தற்கொலை செய்துகொண்ட குற்றவாளி


இந்த நிலையில், அதிகாலை சிறையின் கழிவறையில் விவேகானந்தன் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. உடலை மீட்ட சிறைக் காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி பாலியல் கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


POCSO என்றால் என்ன ?


குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை, மோசமான பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரண தண்டனை, அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதைத் தடுக்க, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் அல்லது POCSO, (திருத்தம்) மசோதா, 2019. குழந்தை ஆபாச படங்கள். POCSO மசோதா, ஆபத்துக் காலங்களில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதிப்படுத்தவும் முன்மொழிகிறது. இந்த மசோதா பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது - ராஜ்யசபா ஜூலை 29, 2019 அன்று மற்றும் லோக்சபா ஆகஸ்ட் 1, 2019 அன்று நிறைவேற்றியது. POCSO மசோதா, 2019, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சிறுவர் ஆபாசப் படங்களைத் தடுப்பதற்காக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்க மசோதா வகை செய்கிறது என்றார்.