நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கீழ்கோத்தகிரி தூணேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தருமன். இவரது மனைவி சீதையம்மாள். இவர்களது மகன் போஜராஜன் (வயது 49). இவர் 1994 ஆம் ஆண்டு முதல் சுமார் 28 ஆண்டு காலம் காவல் துறையில் பணியாற்றி வந்தார். சமீபத்தில் அவருக்கு சப்- இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைத்தது. சோலூர் மாவட்ட காவல் நிலையத்தில் இவர் பணியாற்றி வந்தார்.
இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவர் போஜராஜனை பிரிந்து தூணேரி கிராமத்தில் இருக்கும் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி போஜராஜன் கடந்த ஓராண்டாக பணிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு போஜராஜன் பெற்றோர் கோத்தகிரிக்கு சென்றுள்ளனர். அப்போது போஜராஜன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலை 6 மணிக்கு அவரது பெற்றோர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த போஜராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து போஜராஜனை மீட்டுள்ளனர். பின் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.