பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவம் தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒரு பகுதியாக "TN நலம் 360" என்ற யூ டியூப் சேனலை உருவாக்க - அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோய்கள், சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் TN Nalam 360 என்ற யூடியூப் சேனல் துவங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த யூடியூப்பின் நோக்கம் என்ன? இது எப்படி மக்களுக்கு பயன்படும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநர், சமூக ஊடகங்களில் முதன்மையான வெகுஜன ஊடகத் தொடர்புத் தளமாகச் செயல்படும் வகையில், "TN நலம் 360" என்ற யூ டியூப் சேனலை உருவாக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
உலக அளவில் அனைத்து வயதினருக்கும் ஒரே தளத்தில் செய்திகளை தெரிவிக்க, இத்தலைமுறையில் இருக்கும் பொதுமக்களுக்கு செய்திகளை எளிதில் கொண்டு சேர்க்கவும், நிபுணர் நேர்காணல் வீடியோக்கள், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் குறித்து சுகாதாரத்துறை இயற்றிய பாடல்கள், துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் கள அளவிலான செயல்பாடுகள் போன்ற மல்டிமீடியா செய்திகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அரசு அவரது கோரிக்கைகளை பரிசிளித்து , பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரின் முன்மொழிவை ஏற்று, அதன்படி, "TN நலம் 360" என்ற யூ டியூப் சேனலை உருவாக்க பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு இயக்குநருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த TN Nalam 360 யூடியூப் சேனல் தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒருபகுதியாக உருவாக்கப்படும். யூடியூப் சேனலை உருவாக்குவதற்கான செலவினங்களை அரசு வழங்கும். இதற்காக தேசிய சுகாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு சுகாதார திட்டங்களில் இருந்து நிதி பயன்படுத்தப்படும். இதனால் யூடியூப் சேனல் தொடங்குவதற்கான நடவடிக்கையை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் துவங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.